பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை; பிற்போக்குத்தனமான நடவடிக்கை: அன்புமணி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 18, 2018

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை; பிற்போக்குத்தனமான நடவடிக்கை: அன்புமணி

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்றும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் மிகவும் பிற்போக்குத்தனமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, 11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ஒன்றாகச் சேர்த்து தான் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது நடப்பாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது; 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டும் தான் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தெரியவில்லை.
11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கடந்த ஆண்டில் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள 90% தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்பதால் தான். 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்பதற்காக, 11 ஆம் வகுப்பிலேயே 12 ஆம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படுவதால் அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
உயர்கல்விக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஒன்றாக கணக்கிட்டு, அதனடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தினால் தான் 11 ஆம் வகுப்பு பாடங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்கு மாறாக, 11 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது என்று அரசின் அறிவிப்பு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.
தமிழக அரசின் புதிய முறை நடைமுறைக்கு வந்தால் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிலேயே 12 ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்துவிடும். 11 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு, மீதமுள்ள காலங்களில் 12 ஆம் வகுப்புப் பாடங்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் நடத்தப்படும். பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பாடங்களுக்கும், நீட், ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களுக்கும் 11 ஆம் வகுப்பு பாடம் தான் அடிப்படை என்பதால், 11 ஆம் வகுப்பில் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாவிட்டால் உயர்கல்வி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டு விடும்.
ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் வெற்றி பெறுவது குதிரைக் கொம்பாக உள்ளது. ஐஐடிகளில் ஒவ்வொரு ஆண்டும் சேரும் தமிழக பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் 11 ஆம் வகுப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், அச்சீர்திருத்தங்கள் அனைத்தையும் சிதைக்கும் வகையில் தான் தமிழக அரசு இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தங்களிடம் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர் என்று காட்டிக் கொள்ள விரும்பும் தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்றுத் தான் இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
11 ஆம் வகுப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் சற்று கடினமாக இருப்பது உண்மை தான். புதியப் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் போது இவ்வாறு நடப்பது இயல்பு தான். இதற்கான தீர்வைக் காண்பதை விடுத்து 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளத் தேவையில்லை என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெறப் வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment