பள்ளிக் கல்வி கிடைக்காத 30 கோடி குழந்தைகள்: ஐ.நா அறிக்கை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 21, 2018

பள்ளிக் கல்வி கிடைக்காத 30 கோடி குழந்தைகள்: ஐ.நா அறிக்கை!

பள்ளிக் கல்வி கிடைக்காத 30 கோடி குழந்தைகள்: ஐ.நா அறிக்கை!
உலக நாடுகளில் வாழும் குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு, பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 3 முதல் 17 வயதுடைய குழந்தைகளில் சுமார் 30.3 கோடி பேர் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் சுமார் 10 கோடி குழந்தைகள் போர், மோதல் மற்றும் பேரிடர்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் வாழ்பவர்கள் எனவும் இப்பகுதிகளில் வாழும் குழந்தைகளில் 15 முதல் 17 வயதைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் பள்ளிக்கூடத்தையேப் பார்த்திராதவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கைத் தெளிவுபடுத்துகிறது.
நிலைமையின் தீவிரத்தை விளக்கிய யுனிசெஃபின் தலைமை நிர்வாகி, “ இது வரலாற்றில் மிகவும் நெருக்கடியான நேரம். இது தொடர்பாக நாம் உடனடியாக செயல்பட வேண்டும். அப்போதுதான் அமைதியான, வளமான, திறம்பட செயல்படும் இளைஞர்களை நம்மால் உருவாக்க முடியும்” என்றார்.
கடந்த புதன் கிழமை நடைபெற்ற ஐ.நாவின் 73ஆவது பொது சபைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை குறித்து பேசிய யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா, ஒரு நாடு மோதல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்படும்போது அங்குள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குழந்தைகளின் பள்ளிக்கூடங்கள் அழிக்கப்படுகிறது அல்லது முகாம்களாகவும் ராணுவத்தினர் தங்கும் இடங்களாவும் மாற்றப்படுகிறது என்றும் ஆதங்கப்பட்டார். மேலும் பேசிய அவர், “ சில இடங்களில் வேண்டுமென்றே பள்ளிகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுபோன்ற தொடர் சூழ்நிலைகளால் அப்பகுதியில் வறுமை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது” என்றார்.
`திருடப்பட்ட எதிர்காலம்; பள்ளிக்கு வெளியில் இளம் குழந்தைகள்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இதுபோன்று போர் மற்றும் பேரிடர் சூழல்களில் வாழும் ஐந்தில் இரண்டு குழந்தைகள் ஆரம்பக்கால கல்வியைக்கூட முடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி உலக நாடுகளை கவனிக்கவைத்திருக்கிறது.

No comments:

Post a Comment