உயர் கல்விக்கான உதவித்தொகை அந்தந்த ஆண்டுகளில் ஒதுக்காவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் கல்வித் தொகையை மத்திய அரசு, மாநில அரசுககள் வழங்குகின்றன. இந்தத் தொகையை மாநில அரசு, கல்லூரிகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால், 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய 1,576 கோடி ரூபாய் வழங்கவில்லை என்பதாலும், தமிழக அரசு கேட்டுப் பெறவில்லை என்பதாலும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுவதாக வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதைப் பதிவு செய்த நீதிபதிகள், 'சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் என்பது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான விவகாரங்களை மட்டுமே கவனிக்கும் என்பதால், பழங்குடியின மாணவர்களைக் கருத்தில் கொண்டு, மத்திய பழங்குடியின நலத்துறையை வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், கல்வி உதவித்தொகையை அந்தந்த கல்வியாண்டில் ஒதுக்காவிட்டால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா எனக் கேள்வி எழுப்பியதுடன், வழக்கு குறித்து மத்திய - மாநில அரசுகள், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், மத்திய பழங்குடியின நலத்துறை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்
No comments:
Post a Comment