தேர்தல் பணிகளில் அரசு ஊழியர் வதைபடுவது தொடரக் கூடாது! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 29, 2019

தேர்தல் பணிகளில் அரசு ஊழியர் வதைபடுவது தொடரக் கூடாது!

தேர்தல் பணிகளில் அரசு ஊழியர் வதைபடுவது தொடரக் கூடாது!

நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் தாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை விரும்பவில்லை. அரசு ஊழியர்களின் இந்தத் தயக்கத்துக்கான காரணங்களைப் பரிசீலிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டியது அவசியம்.
வாக்குப் பதிவு அலுவலர்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்து உணவுப்பொருட்களைப் பெறுவது கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவைத் தங்களது சொந்தப் பொறுப்பில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது நடைமுறையில் வேடிக்கையானதும்கூட. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கிருந்து நகர முடியாத அளவுக்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யக்கூடத் தேர்தல் ஆணையத்தால் முடியாதா என்ன?வாக்குப் பதிவு அலுவலர்கள் தேர்தலுக்கு முதல் நாளே வாக்குச்சாவடிகளில் தங்க வேண்டியிருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்து அன்றைய இரவு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வரைக்கும் அவர்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருக்க வேண்டும். அநேகமாக நள்ளிரவு வேளைகளில்தான் அவர்கள் கிளம்ப முடியும். போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கும்கூடத் தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடுகளையும் செய்வதில்லை.
தொடர்ந்து ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு ஓய்வின்றி பணிபுரிய வேண்டியிருக்கும் அந்த அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. சில வாகனங்களை ஏற்பாடு செய்தால்கூடப் போதும், நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை வழங்கிவிட முடியும். பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் என்பது அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களாகவே இருக்கின்றன. அனைத்துப் பள்ளிகளிலுமே கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடந்தால் தொடர்புடைய அலுவலர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்ச வசதிகளைச் செய்துதருவதில்கூடத் தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது!

No comments:

Post a Comment