பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரிய மனு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 29, 2019

பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரிய மனு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரிய மனு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை (என்சிசி)  பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினமும் நடத்தக் கோரிய வழக்கில்,  பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடுவைச் சேர்ந்த ஹோமர் லால்  தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது இளைஞர்களால் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இதற்கு, கல்வி நிலையங்களில் பாடங்களை மட்டும் மனப் பாடம் செய்ய வைப்பதும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்காததும் தான் முக்கியக் காரணம். எனவே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் என்சிசி பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை கட்டாயமாக்கினால் மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக் கொள்வர். மேலும், மாணவர்களுக்கு மனஅழுத்தம் நீங்கி நன்றாக கல்வி கற்கும் மனநிலை உருவாகும். எனவே, தனியார் பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்களுக்கும் என்சிசி பயிற்சி பெறுவதைக் கட்டாயமாக்கிடவும், நன்னெறி வகுப்பை தினமும் நடத்த நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த
நீதிபதிகள்,  ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் யாரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ இயலாது. எனவே மாணவர்களுக்கு, பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நன்னெறிகளைக்  கற்றுத்தருவது அவசியம். தற்போதைய சூழலில் இதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனால் இந்த வழக்கில்  சிபிஎஸ்இ  மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையை  நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராகச் சேர்ப்பதாகவும், பள்ளிக் கல்வித்துறை செயலர்  இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment