மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் குஷி:
இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் வழக்குகளுக்கு மத்தியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டும் அடைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அம்மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் 40,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டிலேயே கொரோனா பரவல் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment