ஆதித்யா எல்-1 விண்கலம் தனது புவி சுற்றுப்பாதை பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செப்.19) முதல் சூரியனை நோக்கிச்செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்.2-ம் தேதி விண்ணில் செலுத் தப்பட்டது.
தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து, விண்கலத்தில் உள்ள உந்துவிசை இயந்திரங்களைச் சீராக இயக்கி, அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தொலைவானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதன்மூலம் குறைந்தபட்சம் 256 கி.மீ. தூரமும், அதிகபட்சம் ஒருலட்சத்து 21,973 கி.மீ. தொலைவும் கொண்ட புவி சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப் பட்டது.
இந்நிலையில், ஆதித்யாவின் புவி சுற்றுப்பாதை பயணம் இன்றுடன் (செப். 18) நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, விண்கலத்தை நாளை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, சூரியனை நோக்கிப் பயணிக்க வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர். ஆதித்யா திட்டத்தில் மிகவும் சிக்கலானப் பணிகளில் இதுவும் ஒன்றாகும்.
இதை குறிப்பிட்ட நேரத்துக்குள் வெற்றிகரமாக முடிப்பது அவசியம்.
அதன் பின்னர் ஆதித்யா விண்கலம் சுமார் 100 நாட்கள் பயணித்து,புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே, சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட உள்ளது.
அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு, சூரியனின் கரோனா மற்றும்போட்டோஸ்பியர், குரோமோஸ் பியர் பகுதிகளை ஆதித்யா ஆய்வுசெய்யும்.
இதற்காக அதில் 7 வகையான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 4 கருவிகள் சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டு, நேரடியாக கண்காணித்து தகவல்களை வழங்கும்.
மீதமுள்ள 3 கருவிகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால், அதன்புறவெளியில் உருவாகும் மாற்றங்களை எல்-1 பகுதியில் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை ஆராய்ந்துகணிக்கும். இதன்மூலம் விண்வெளியில் கிரகங்களுக்கு இடையேயான சூரிய இயக்கவியலின் விளைவு குறித்த அரிய விவரங்கள் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment