இடமாறுதல் "கவுன்சிலிங்' உத்தரவில், ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை பழிவாங்குவதாக, கலை ஆசிரியர் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதன் மாநில தலைவர் ராஜ்குமார் அறிக்கை:இடமாறுதல் குறித்த உத்தரவில், இரண்டு ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணிசெய்த ஆசிரியர், பொது மாறுதல் "கவுன்சிலிங்'கில் பங்கேற்கலாம் என்ற விதியை மாற்றி, 2012 முதல், 2015 வரை, ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணி செய்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த பணியிடத்துக்கு மாறுதல் கேட்பவர், பணியில் சேர்ந்த பின்பே, அங்கு பணியாற்றி வரும் ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என்பது, ஒரே பள்ளியில் நான்கு ஆண்டுகள் வரை பணி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.விருப்பத்தின் அடிப்படையில் பொது மாறுதல் "கவுன்சிலிங்' என்பதை, துறை ரீதியான மாறுதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது; இதனால், வெளிப்படையான பொது மாறுதல் இன்றி, பணியிடங்கள் மறைக்கப்படும் என்ற அச்சமே நிலவுகிறது.மாறுதல் கேட்கும் விண்ணப்பத்தில், மாவட்டம் மட்டுமே குறிப்பிட வேண்டும்; இடம் குறிப்பிட கூடாது என்பதால், ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பழைய நடைமுறையை நீக்கி, குளறுபடியான உத்தரவு வெளியிட்டிருப்பது, பள்ளி கல்வித்துறையின் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment