புதுடில்லி:'சுப்ரீம் கோர்ட் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமை யிலான மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.
'சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளையை அமைக்க வேண்டும்' என தென் மாநில மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆராய்ந்த சட்டத் துறை 'சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்கலாம்' என பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் பார்லிமென்ட் குழுவும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்நிலையில் 'சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி ஏ.எம்.கிருஷ்ணா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரிக்கிறது.
இது தொடர்பாக ஏராளமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் சாதகமான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.சென்னையில்
சுப்ரீம்கோர்ட் கிளை அமைந்தால் தென் மாநிலங்கள் அனைத்திற்கும் அதிக பலன்கள் கிடைக்கும்.
பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழங்கிய முக்கியமான மனித உரிமைகளில் ஒன்று. அரசியல் அமைப்பு சட்டத்தின் 19 - ஏ பிரிவில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டில்
லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன; நீதிபதிகளுக்கு வேலைப்பளு அதிகரித்து உள்ளது.நம்மை போன்ற ஜனநாயக நாடுகளில் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் முடங்கியுள்ளது என்பதற்காக நீதி கோருபவர்களுக்கு நீதியை மறுக்க முடியாது. மாறாக நீதித்துறை விரிவடைய வேண்டும். அதாவது நீதி வழங்கும் நீதிமன்றங்கள் பல விதங்களில் பெரிதாக வேண்டும்.வழக்குகள் அதிகரிக்கும் அளவுக்கு நீதிமன்றங்களும் பெருக வேண்டும். சுப்ரீம் கோர்ட் டில்லியில் அமைந்து உள்ளதால் தமிழகம், கேரளா, அசாம் போன்ற துார மாநிலங்களில் உள்ளவர்களால் சுப்ரீம் கோர்ட்டை எளிதாக அணுக முடியவில்லை. போக்குவரத்து செலவும் அதிகம்; தங்கும் வசதியை பார்க்க வேண்டும்; மொழி பிரச்னை போன்ற பல விஷயங்களை கவனிக்க வேண்டி உள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் தமிழகத்திலும் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் சுப்ரீம் கோர்ட் கிளைகளை அமைக்க வேண்டும். நிதி நிலைமை சுப்ரீம் கோர்ட்டின் கட்டமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் கிளைகள் துவக்கப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் கிளை அவசியம்:
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து மட்டும், 15 சதவீதத்திற்கும் மேலான வழக்குகள், சுப்ரீம் கோர்ட் செல்கின்றன. ஆனால், தமிழகம், கேரளாவில் இருந்து ஒரு சதவீத வழக்குகள் கூட செல்வதில்லை. காரணம், துாரமும், செலவும் அதிகமாவதே. சென்னையிலோ அல்லது தென் மாநில நகரங்களில் ஏதேனும் ஒன்றிலோ, சுப்ரீம் கோர்ட் கிளை அமைவது மிக மிக அவசியம்.
காந்தி
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
சுப்ரீம் கோர்ட் கிளை சென்னையில் அமையும்போது, தென் மாநில மேல் முறையீட்டு வழக்குகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிவர்கள் கூட, நீதிக்காக மேல்முறையீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். காவிரி, முல்லை பெரியாறு போன்று மாநிலங்களுக்கு இடையிலான வழக்குகளை எளிதாக நடத்த வாய்ப்பு கிடைக்கும்.
டி. லஜபதிராய்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்ற கிளை.
சுப்ரீம் கோர்ட் கிளை, தென் மாநிலங்களில் எங்கு அமைந்தாலும் வரவேற்கிறோம்; சென்னையில் அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சி. தமிழகத்திலிருந்து, வழக்குகளுக்காக, சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்வதால், மொழி பிரச்னை, பணம் விரயம் மட்டுமின்றி, வழக்கறிஞர்கள் கட்டணமும் அதிகம். சென்னையில், அதன் கிளை அமைத்தால் சிக்கல்கள் தீரும்.
பால் கனகராஜ், தலைவர்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்.
சென்னை மாகாணமாக இருந்தபோது, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவுக்கும் சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றம்தான் பிரதானமாக இருந்தது. சென்னையில், சுப்ரீம் கோர்ட் கிளை அமைந்தால், நான்கு மாநிலங்கள் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் அனைத்தும் பயன் பெறும்; வழக்களுக்கான செலவும் குறையும். அதற்கேற்ப, பார்லிமென்டில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
டிராபிக் ராமசாமி
சமூக ஆர்வலர்.
No comments:
Post a Comment