ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் உள்ளவர்களுக்கு காஸ் மானியம் ரத்து: புத்தாண்டு முதல் அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 28, 2015

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் உள்ளவர்களுக்கு காஸ் மானியம் ரத்து: புத்தாண்டு முதல் அமல்

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உடைய வரிசெலுத்துவோருக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது வரும் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.

தற்போது அனைத்து நுகர்வோர்களுக்கும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலையான 419.26 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சந்தை விலையில் இந்த சிலிண்டர் ரூ.608-க்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மானிய ரத்து தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏராளமான நுகர்வோர்கள் தானாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். எனவே, அதிக வருவாய் பிரிவில் உள்ளவர்கள் சமையல் காஸை சந்தை விலையில் வாங்க வேண்டும்.

எனவே, நுகர்வோரின் கணவர் அல்லது மனைவி, வருமான வரி செலுத்தும் வகையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுபவராக இருப்பின் அவர்களுக்கு காஸ் மானியம் வழங்கப்படமாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 2016 முதல் சிலிண்டர் பதிவு செய்யும்போது, நுகர்வோர் தானாக முன்வந்து அளிக்கும் தகவலின் அடிப்படையில் இத்திட்டம் அமலுக்கு வரும். உரியவர்களுக்கு மானிய சலுகைகள் சென்றடைய வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்தம் 16.35 கோடி சமையல் எரிவாயு காஸ் நுகர்வோர்கள் உள்ளனர். நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, போலி நுகர்வோர்கள் களையப்பட்டதில் இந்த எண்ணிக்கை 14.78 கோடியாக குறைந்தது. இவர்களில் எத்தனைபேர், வருமான வரி செலுத்தும் வகையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுகின்றனர் என்ற கணக்கீடு இல்லை.

விட்டுக்கொடுங்கள்

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சந்தை விலையில் காஸ் சிலிண்டர் வாங்க தகுதியுள்ள வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். ஒரு கோடி பேர் மானியத்தை விட்டுக் கொடுத்தால் ஒரு கோடி ஏழை மக்கள் பயன்பெறுவர் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுவரை 57.5 லட்சம் நுகர்வோர்கள் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

ஏழை மக்கள் சமைப்பதற்காக, மண்ணெண்ணெய், விறகு, நிலக்கரி, சாண வறட்டி உள்ளிட்டவற்றை சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில், அனைவருக்கும் சமையல் காஸ் இணைப்பு வழங்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த இலக்கை எட்டுவதற்காகவே, மானியத்தை விட்டுக்கொடுக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

உச்சவரம்பு நிர்ணயம்

மானிய செலவு, நிதிப்பற்றாக்குறையை குறைக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 என கடந்த 2012 செப்டம்பரில் நிர்ணயம் செய்தது. பின்னர் இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2014 ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து மானிய சிலிண்டர்களுக்கான உச்சவரம்பு 12 ஆக உயர்த்தப்பட்டது.

நுகர்வோர் காஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்குகின்றனர். மானியம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

2014-15-ம் நிதியாண்டில் சமையல் காஸ் மீதான மானியம் ரூ.40 ஆயிரத்து 551 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதால் மானியம் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதியை விட குறைந்துள்ளது. செப்டம்பர் வரையிலான அரையாண்டு முடிவில் மானியம் ரூ.8,814 கோடியாக உள்ளது.

No comments:

Post a Comment