ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்று கூறியது
ஆனால் ரூ.1000 நோட்டு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரூ.1000 நோட்டு நிரந்தரமாக ஒழிக்கப்பட்டால் அது நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் என்று கூறப்பட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ரூ.1000 நோட்டு விலக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையே புதிய நோட்டுகள் குறித்து மத்திய அரசுக்கு கருத்து தெரிவித்த பலரும் ரூ.1000 நோட்டுக்களையும் மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். பொருளாதார நிபுணர்களும் ரூ.1000 நோட்டின் அவசியத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து ரூ.1000 நோட்டை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய பொருளாதார துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-
புதிய ரூபாய் நோட்டுகள் வடிவமைப்பில் மிகச்சிலரே ஈடுபட்டுள்ளனர். எனவேதான் முதல் கட்டமாக ரூ.500, ரூ.2000 புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக புதிய ரூ.1000 நோட்டு வர உள்ளது. அந்த 1000 ரூபாய் நோட்டு புதிய வடிவமைப்புடன் புதிய வண்ணத்தில் இருக்கும்.
இன்னும் சில மாதங்களில் புதிய ரூ.1000 நோட்டுகளைப் பெறலாம்.
அனைத்து ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை இனி தேவைக்கு ஏற்ப மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே இன்னும் சில மாதங்களில் புதிய வடிவங்களில் ரூபாய் நோட்டுகளை காணலாம்.
புதிதாக இன்று வெளியிடப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பயன்பாடு எப்படி உள்ளது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். ரூ.2 ஆயிரம் நோட்டை மக்கள் பயன்படுத்தி ஆதரவு கொடுப்பதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.
நாளை ஏ.டி.எம்.க்கள் திறக்கப்படும் போது ரூ.100 நோட்டுகள்தான் கிடைக்கும். ரூ.2 ஆயிரம் நோட்டுகள் உடனடியாக கிடைக்காது.
ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் அமைப்புக்கு ஏற்ப ஏ.டி.எம். எந்திரங்களில் மாற்றப்பட வேண்டும். அதன் பிறகே ஏடிஎம்களில் ரூ.2 ஆயிரம் நோட்டு கிடைக்கும். எனவே பொதுமக்கள் அதற்கு ஏற்ப முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ் கூறினார்.
No comments:
Post a Comment