பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரிசர்வ் வங்கியில் கூடுதல் கவுன்டர்களும் திறக்கப்பட்டன.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறியதாவது:-
பொது மக்கள் பணத்தை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கியில் 4 சிறப்பு கவுன்டர்களுடன் மொத்தம் 8 கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு யார் வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய், 10 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
வழக்கமாக இந்த வங்கி காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்கும். பொது மக்கள் வசதிக்காக இனி மாலை 4 மணி வரை செயல்படும். இங்கு ரூ.4000 வரை தற்போது பணம் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய 2000 ரூபாய் தமிழகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக வினியோகிக்கப்படுகிறது. அனைத்து வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் நேற்று இரவுக்குள் அனுப்பப்பட்டுவிட்டன. அனைத்து வங்கிகளும் சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் இயங்கும்.
நாளை முதல் எல்லா ஏ.டி.எம்.களிலும் ரூ.2000 வரை பணம் எடுக்கலாம். 19-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் ரூ.4000 வரை எடுத்துக் கொள்ளலாம்.
வங்கி கணக்கு மூலமாக தினமும் 10 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம். வாரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம். சில நாட்களில் இந்த தொகை படிப்படியாக உயர்த்தப்படும். பழைய பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பான சந்தேகங்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் வெப் சைட்டில் விவரம் தெரிந்து கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கியில் உதவி மையமும் செயல்படுகிறது. 044-25381390, 25381392 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். பணத்தை மாற்றுவதற்காக யாரிடமும் கமிஷன் கொடுக்க தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment