பாடப் புத்தகங்களில் டிஜிட்டலை அறிமுகப்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை: சிறப்புப் பயிற்சி பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
பாடப் புத்தகங்களில் க்யூஆர் கோடு அச்சிட்டு அதன்மூலம் டிஜிட்டல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பள்ளிக் கல்வித் துறை.
இதற்காகஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தவறவிடாதீர்
என்சிஇஆர்டி குழந்தைகள் கல்வித் திருவிழா:
விருதுகள்பெற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
இதுகுறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆங்கில ஆசிரியர் சங்கர்.''அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான நான், ஆர்வத்தின் காரணமாக ஆசிரியர் பணிக்கு வந்தேன். 2005-ல் இருந்து பாடங்களை வீடியோ வடிவில் மாற்றிவருகிறேன். தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பாக பாடப்புத்தகங்களில் க்யூஆர் கோடை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பாடங்களை டிஜிட்டல் வடிவத்தில் படிக்கலாம்.இதை உருவேற்றப்பட்ட (Energised) பாடப் புத்தகங்கள் என்று அழைக்கிறோம். இதில் க்யூஆர் கோடு மூலம் இயங்குரு (Animated) பாடங்களைப் பார்க்கலாம், படிக்கலாம்.பாடப் புத்தகங்களை ஆசிரியர்களைக் கொண்டே டிஜிட்டலுக்கு மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. ஏனெனில் வகுப்பறை சூழலில் மாணவனின் செயல்பாடுகளை நன்கு உணர்ந்தவர்கள் ஆசிரியர்களே. அவர்களுக்குத்தான் அதன் தேவை தெரியும் என்பதால் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி கொடுத்து, அவர்கள் மூலம் பாடத் திட்டத்தில் டிஜிட்டல் வடிவத்தைச் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.
முதலில் காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அங்குள்ள 16 வட்டங்களில் இருந்து 160 ஆசிரியர்கள் ஆரம்ப கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேர்வுகள் வைக்கப்பட்டன. அதில் இருந்து ஆசிரியர்களை வடிகட்டினோம். அதில் 25 முதல் 40 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாக்குவது எப்படி? கதை,உள்ளடக்கத்தை எப்படிச் சொல்ல வேண்டும், பின்னணியில் குரல் கொடுப்பது எப்படி, எங்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அத்துடன், கணினியில் தமிழை எழுதுவது எப்படி, மொபைலில்எடுக்கப்பட்ட ஆடியோக்களை எப்படி எம்பி3 வடிவத்துக்கு மாற்றுவது, வீடியோ உருவாக்க செயலியான கேம்டேசியா அறிமுகம், எப்படி வீடியோ எடுக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம்.காலை முதல் மதியம் வரை பயிற்சி, மதியத்துக்கு மேல் செய்முறை வகுப்புகள் என்று 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் நன்றாகக் கற்றுத் தேர்ந்தனர். அடுத்ததாக திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வாரம் ஒரு முறை என்ற வீதத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 100 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதில் இருந்து 85 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கும் அதே பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் தற்போது டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் சிறப்பான புலமை பெற்றுள்ளனர்.இதே திட்டத்தை மற்ற மாவட்ட ஆசிரியர்களிடமும் விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது. இதன்மூலம் நம்முடைய பாடத் திட்டம் தேசிய அளவிலான தரத்துக்கு உயர்த்தப்படும்'' என்கிறார் சங்கர்.
தொடர்புக்கு:
ramaniprabhadevi.s@thehindutamil.co.in
No comments:
Post a Comment