சுற்றுச் சூழல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் மாங்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் சரவணனுக்கு உருவம்பட்டி பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீ.சரவணன் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் மாணவர்களிடம் இயற்கை வழி வாழ்வு முறை குறித்தும் ,பிளாஸ்டிக் கேரிப்பைக்கு பதிலாக மஞ்சள் பையை உபயோகிக்க வலியுறுத்தியும்,மரங்களை நட்டு பராமரிப்பது குறித்தும் அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்..அவ்வாறு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் பொழுது பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும்,மஞ்சள் பை வழங்கியும் ,மாணவர்களிடம் விழிப்புணர்வு சொற்பொழிவு ஆற்றியும்,துண்டு பிரசுங்கள் வழங்கியும் மாணவர்களை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தும் வருகிறார்.
இது குறித்து ஆசிரியர் சீ.சரவணன் கூறியதாவது: கடந்த ஜீன் 30 ஆம் தேதி அன்று புதுக்கோட்டையில் மாப்பிள்ளையார் குளம் அருகே கனமழை பெய்தது.அப்பொழுது வரத்து வாரி பாலத்தின் அடியில் உள்ள தண்ணீர் வெளியேறும் குழாயில் கேரிப் பைகள் அடைத்திருந்ததால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தண்ணீர் பாலத்தின் மேல் உள்ள சாலையின் மேல் அதிகளவில் சென்றது..அப்பொழுது அவ்வழியே வந்த பள்ளிக் குழந்தைகள் அந்த இடத்தை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.அப்பொழுது அக்குழந்தைகள் அவ்விடத்தை கடக்க நான் உதவி செய்த பொழுது தான் மக்களிடம் கேரிப்பையை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது..வருடந்தோறும் காந்தி ஜெயந்தி அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் மறைந்த நம்மாழ்வாரின் உரைகளை கேட்ட பொழுது அவரின் மீது பற்று ஏற்பட்டது..அன்றிலிருந்து இயற்கை வாழ்வு குறித்த தேடலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.திருத்துறைப் பூண்டியில் நெல்ஜெயராமன் நடத்தும் நெல் திருவிழாவில் கலந்து கொள்வேன்..அங்கே அவர் கொடுக்கும் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு வந்து விவசாயியும் ஆசிரியருமாகிய காட்டுப்பட்டி சின்னக்கண்ணுவிடம் கொடுப்பதை கடமையாக செய்து வந்தேன்.வீட்டு மாடியிலும் மாடித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன். புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி படிக்கும் பொழுது விரிவுரையாளர்கள் மாரியப்பன்,விஜயலெட்சுமி,பாலையா ஆகியோர் மரம் வைத்து பாதுகாப்பதில் காட்டி வரும் ஆர்வத்தை பார்த்து மரம் வளர்க்கும் ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது..அதன் பின்பு நான் எப்பொழுதும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதையே தனது வாடிக்கையாக செய்து வருகிறேன்.என்னுடைய திருமண நாள் 2014 ஆம் ஆண்டு செப் 4 அன்று வந்திருந்த அனைவருக்கும் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கினேன்.பள்ளியின் முக்கிய விழாக்களின் போதும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன்.தற்பொழுது எனக்கு பி.எட் பயின்றமைக்காக ஊக்கத் தொகை கிடைத்தது.அந்த பணத்தில் ஒரு பகுதியை நல்வழியில் செலவிட எண்ணினேன்..உடனே என் மனதில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்ய எண்ணம் வந்தது.அதன்படி பாரதி பிறந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாங்குடியில் எனது பயணத்தை தொடங்கி மாராயபட்டி,புல்வயல்,பெருமாநாடு,பெருஞ்சுனை ,சுந்தர்ராஜ் நகர்,கோதாண்டராம்புரம்,கீழபழுவஞ்சி,செல்லுகுடி ,டி.மேட்டுப்பட்டி ,ஆரியூர்,மதியநல்லூர் ,கல்லம்பட்டி,சொக்கநாதம்பட்டி ,சேந்தமங்கலம் ஆகிய பள்ளிகளில் இயற்கை வாழ்வு வாழ மேற்கொள்ள வேண்டிய முறை குறித்தும்,மரம் நட்டுப்பராமரிப்பதின் அவசியம் குறித்தும்,கேரிப்பையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.எனது பயணம் இந்த வாரம் நிறைவு பெற்று விடும் என்றும் ஜனவரிக்குப் பிறகு விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன்...நான் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்கள் நாங்களும் உங்களை போல் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என என்னிடம் கூறும் பொழுது என் மனம் மகிழ்வாக இருக்கிறது.நாம் எப்படி நல்ல காற்று ,நல்ல தண்ணீர்,நல்ல மண்ணில் வாழ்ந்தோமோ அது போல நம் சந்ததியும வாழ வேண்டும் என்பதற்காகவே பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன் .தற்பொழுது உருவம்பட்டி பள்ளியில் மாணவர்கள் என்னை அன்போடு வரவேற்ற விதமும் அவர்களது உற்சாக செயல்பாடும் என்னை மேலும் இந்த பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உந்துதலைத் தந்துள்ளது என்றார்..
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சரவணனுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் மற்றும் அன்னவாசல் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment