ஊதிய உயர்வுடன் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிட
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2012ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர
ஆசிரியர்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-
எங்களை பணியமர்த்திய மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து கோரிக்கை
மனு கொடுத்துவருகிறோம்.
கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துவிட்டோம்.
இதுவரை எங்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்துவருவது எங்களை
கவலையில் ஆழ்த்துகிறது.
ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி என முதல்வர்கள் மாறினார்கள்.
சிவபதி முதல் செங்கோட்டையன் என பல கல்வி அமைச்சர்கள் மாறினார்கள்.
சபீதா முதல் பிரதீப் யாதவ் என பள்ளிக்கல்வி செயலர்கள் மாறினார்கள்.
முகம்மது அஸ்லாம் முதல் சுடலைக்கண்ணன் என அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர்கள் மாறினார்கள்.
கடைசியில் நாங்கள் பணிபுரிந்துவந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற
திட்டத்தின் பெயர்கூட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் என
மாறியது.(சர்வ ஷிக்சா அபியான் என்பது சமக்ர ஷிக்சா அபியான் என
மாறிவிட்டது)
ஆனாலும் எங்களின் நிலை கொஞ்சமும் மாறவில்லை. பகுதிநேரம் என்ற போர்வையில்
எங்களின் மீதி நேரமும் இந்த ஒப்பந்த தொகுப்பூதிய வேலையால் வாழ்வாதாரம்
சுரண்டப்படுகிறது. வாரத்திற்கு 3 அரைநாள் மீதி இரண்டுநாள் எந்த வேலைக்கு
போவது. இதனால் பள்ளியோடு முடங்கிபோகிறது எங்களின் வாழ்க்கை.
அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர வேலைக்கேட்டோம். இந்த திட்ட
வேலையிலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றக்கேட்டோம். தமிழக அரசுப்
பணிக்கு மாற்றிடக் கேட்டோம். காலிப் பணியிடங்களில் எங்களை பணியமர்த்தக்
கேட்டோம். செய்யவில்லை. காலிப்பணியிடங்களில் எங்களுக்கு குறைந்தபட்சமாக
முன்னுரிமையை கேட்டோம். எதுவும் செய்யாமல் அரசு எங்களை
கைவிரித்துவிட்டது. நிதி இல்லை என்று சொல்லியே எங்களின் நீதி
மறுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கான
சம்பளத்திற்கு போதுமான நிதி பங்களிப்பை தருவதில்லை என்றும், அதனால் தமிழக
அரசே மத்தியஅரசின் பங்கை சேர்த்து வழங்குகிறது என அரசும், கல்வித்துறை
அதிகாரிகளும் பதில் சொல்லியே எங்கள் கோரிக்கைகளை புறந்தள்ளுகின்றனர்.
நாங்கள் சந்திக்காத அமைச்சர்களே இல்லை. ஆளும் கட்சியின் பவர்சென்டரான
ஐவர் குழுவினருடனும் முறையிட்டுள்ளோம். அப்போதெல்லாம் “அம்மா நிச்சயம்
நல்லது செய்வாங்க. நாங்க சொல்லிட்டோம், கவலைப்படாதீங்க” என்று
சொன்னவர்கள், இப்போது முடிவெடுக்கும் நிலையில் இருக்கும்போதும் “நிச்சயம்
செய்வோம், கவலைப்படாதீங்க என சொல்லிவருவது” எங்களை கவலையில் தள்ளுகிறது.
2017 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம்
செய்ய கமிட்டி அமைக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை கமிட்டி அமைப்பது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
அனைவருக்கும் அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணியிடமாறுதல்
வழங்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அதுவும் இன்னும் சொன்னபடி
நடவடிக்கையை காணோம்.
இதனால் பேருந்து கட்டணம், பெட்ரோல் செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் தள்ளாடி வருகிறோம்.
எங்களுக்கு பிறகு காவல்துறையில் ரூ.7 ஆயிரத்து ஐநூறு தொகுப்பூதியத்தில்
பணியமர்த்தப்பட்ட இளைஞர் படையினர் பின்னர் காலமுறை ஊதியத்தில்
நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
2003ல் எஸ்மா சட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக அரசால்
ரூ.4ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும்
பின்னர் சிறப்பு தேர்வு நடத்தி காலமுறை ஊதியத்தில்
பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தினக்கூலி ஒப்பந்த முறையில் பணிசெய்த சாலைப்பணியாளர்களும் பின்னர்
முறையான ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதர துறைகளில் உள்ளோர்
பரிந்துரை செய்யப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டு வரும்போது
பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் பகுதிநேர
ஆசிரியர்களை மட்டும் நிரந்தரம் செய்யாமல் மறுப்பது எந்தவகையில் நியாயம்
என கேட்டு வருகிறோம்.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட வேலையில்
ஒப்பந்த முறையில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவால் பணியமர்த்தப்பட்ட 16549 பகுதிநேர ஆசிரியர்களை அரசு இன்னும்
அடுத்தகட்டத்திற்கு மாற்றாமல் தொகுப்பூதிய நிலையிலேயே வைத்து எங்களை
பரிதாபநிலைக்கு தள்ளுவது மிகவும் வேதனையளிக்கிறது.
பணிநிரந்தரத்திற்கு முன்பு எங்களை அங்கீகரித்து 8 ஆண்டுகளாக பள்ளிகளை
நடத்தும் அனுபவத்தினையும், அரசு கேட்கும் உரிய கல்வித்தகுதியும் உள்ள
எங்களுக்கு முதல்கட்டமாக அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணி ஊதிய
உயர்வுடன் வழங்க வேண்டும்.
தற்போது 11 மாதங்களுக்கு சுமார் ரூ.100கோடி சம்பளத்திற்கு செலவாகிறது.
சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.400கோடி நிதி
ஒதுக்கினாலே போதுமானது.
வேலைநிறுத்த காலங்களில் அரசின் உத்தரவின்படி பள்ளிகளை இயக்கிய பகுதிநேர
ஆசிரியர்களுக்கு அரசு கருணையுடன் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என உறுக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல்,
தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி போன்ற கல்வி
இணைச்செயல்பாடு பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு போதித்து
வருகிறோம்.
16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போது சுமார் 12ஆயிரம் பேர்
பணிபுரிகிறோம். இவர்களுக்கு ரூ.5ஆயிரத்தில் ஆரம்பித்த சம்பளம் இந்த 8
கல்வி ஆண்டுகளில் ரூ.7ஆயிரத்து 7 நூறாக தரப்படுகிறது.
கோடைகால விடுமுறையான மே மாதத்திற்கு 7 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால்
ஒவ்வொருவரும் ரூ.45ஆயிரத்து 7 நூறு இழந்து வருகிறோம். எங்களின் நியமன
ஆணையிலோ அல்லது 110 விதியிலோ மே மாதத்திற்கு சம்பளம் கிடையாது என
ஆணையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்களுக்கு தரப்படும் 10% வருடாந்திர
ஊதிய உயர்வு சரிவர தரப்படவில்லை.
P.F., E.S.I., எதுவும் இல்லை.
மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்தவித விடுப்பு சலுகைகளும் தரப்படவில்லை.
ஒருமுறைகூட போனஸ் கொடுக்கவில்லை.
பணியில் சேர்ந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை.
58 வயதை எசுட்டி பணிஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வித நிதியும் கொடுக்கவில்லை.
இதே திட்டவேலையில் ஆந்திராவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14ஆயிரத்து
203 வழங்கப்படுகிறது.
மேலும் மகளிருக்கு 6 மாத மகப்பேறு கால விடுப்பும் தரப்படுகிறது.
ஆந்திராவைவிட தமிழத்தில் மிகவும் குறைவாக தரப்படுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் ஒப்பந்த தற்காலிக பணியாளர்கள் பணியின்போது
இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியாக ரூ.2இலட்சம்
தரப்படுகிறது.
எனவே ஆந்திரா மற்றும் மேற்குவங்காள அரசுகளைப் போல தமிழக அரசும் அதிகபட்ச
ஊதியம், மகப்பேறுகால விடுப்பு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுநிதி
போன்றவற்றை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை அரசு
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பணியில் நாங்கள் பணியமர்த்தப்பட்ட பின் இதுவரை 7 பட்ஜெட்டுகளை
சமர்பித்துள்ளார்கள். ஆனால் ஒருமுறைகூட ஊதிய உயர்வு அளிக்கவில்லை.
நாங்கள் இதே பாடப்பிரிவுகளில் இத்திட்ட வேலையில் பணிபுரியும்போது
காலிப்பணியிடங்களில் எங்களை பணியமர்த்தாமல், முன்னுரிமை வழங்காமல்,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் 652 கணினி அறிவியல் ஆசிரியர்கள்
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரந்தர ஊதியத்தில்
பணியமர்த்திவிட்டது.
அதைப்போலவே ஆசிரியர் தேர்வாணையம் 1325 சிறப்பாசிரியர்கள்
காலிப்பணியிடங்களில் எங்களை புறக்கணித்து முன்னுரிமைகூட வழங்காமல்
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆசிரியர்கள் தேர்வை நடத்தியது. தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவால் இந்நியமனங்கள்
இதுவரை நடைபெறாமல் உள்ளது. கல்வித்துறையை தவிர பிற துறைகளில் இதுபோன்று
நடப்பதில்லை.
எனவே சமவேலை சமஊதியம் வழங்கினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களின்
வாழ்வாதாரம் மேம்படும்.இதே பாடப்பிரிவுகளில் நிரந்தர ஆசிரியர்களுக்கு
வழங்கப்படும் சம்பளத்தை எங்களுக்கு வழங்கவேண்டும்.
தினக்கூலி ஒப்பந்த, தற்காலிக பணியாளர்களுக்கு அதே பிரிவில் நிரந்தர
ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வழங்கவேண்டும் என ஏற்கனவே
உச்சநீதிமன்றமும், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் இதனை
உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே அரசு இதனை பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட
பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும்.
2015 முதல் 2019 (ஜனவரி 22-30) ஜாக்டோஜியோ வேலைநிறுத்த நாட்களில்
முழுநேரமும் பள்ளிகளை திறந்து நடத்திட அரசு பகுதிநேர ஆசிரியர்களையே
பயன்படுத்தி வருகிறது.
பள்ளிப்பணிகளில் எல்லா வகையிலும் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுவரும்
எங்களுக்கு அரசுஊழியர்களைபோலவே பணப்பலன்களையும், அரசு சலுகைளையும்
கிடைத்திட செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கல்வி தகுதிகேற்ப அவரவர் பாடப்பிரிவுகளில் சிறப்பாசிரியர்களாக அனைவரையும்
காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே
எங்களின் ஒரே கோரிக்கை. இப்போதுள்ள அரசாணை ஒப்பந்த தொகுப்பூதிய பகுதிநேர
வேலையாக உள்ளதால், புதிய அரசாணை வெளியிட்டு அனைத்து வேலைநாட்களிலும்
முழுநேரத்துடன் சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட
அனைவரும் கேட்டு வருகிறோம். ஆளும் அதிமுக அரசு இதனை இத்தருணத்தில்
செய்திட அனைவரும் வேண்டிக்கொள்கிறோம்.
அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரவேலையுடன் சிறப்பாசிரியர்களாக
பணிநிரந்தரம் தர வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பி வருகிறோம்.
எனவே எங்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு கவனம் செலுத்தி மனிதநேயத்துடன்
வாழ்வுரிமை காத்திட கேட்டுக்கொள்கிறோம். மேலும் முதல்வர், பள்ளிக்கல்வி
உள்பட அனைத்து அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
கல்வித்துறை அதிகாரிகளை நேரடியாக சந்திந்து தொடர்ந்து கோரிக்கை மனுவுடன்
முறையிடுவது என கோரிக்கை நிறைவேறும்வரை தொடர்வது என முடிவு செய்துள்ளோம்
என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் – 9487257203
No comments:
Post a Comment