ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 38,705 பேர் தகுதி
ஐஐடி கல்வி நிறுவனத்தில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை
பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) முதன்மை தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.ஐஐடி கல்வி நிறுவனத்தில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை
ரூர்கி ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 5,356 மாணவிகள் உள்பட 38,705 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
அதோடு, இந்த முதல்நிலைத் தேர்வில் தகுதிபெறும் முதல் 2.45 லட்சம் பேர் மட்டுமே ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுதும் தகுதி பெறுவர். இந்த முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள ஐஐடி-க்களில் சேர்க்கை பெற முடியும். இந்த நிலையில், கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இந்த முதன்மைத் தேர்வை 1 லட்சத்து 61,319 பேர் எழுதினர். இதில் 38,705 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5,356 பேர் மாணவிகள்.
மகாராஷ்டிர மாநிலம் பாலர்பூரைச் சேர்ந்த மாணவர் குப்தா கார்திகேய் சந்திரேஷ் 372-க்கு 346 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அலாகாபாதைச் சேர்ந்த ஹிமான்ஷு கௌரவ் சிங் இரண்டாம் இடமும், புதுதில்லியைச் சேர்ந்த அர்ச்சித் பூப்னா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். ஹைதராபாதைச் சேர்ந்த ஷப்னம் சஹாய் 372-க்கு 308 மதிப்பெண்கள் பெற்று மாணவிகளில் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்
No comments:
Post a Comment