தமிழகத்தில் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு "டேப்" வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசுப் பள்ளி ஒன்றில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலை அரங்கத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:-
"தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி பயிலுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனுவே, ஆங்கில வழி வகுப்புகளை இரு மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில், பள்ளிக்கு தலா 20 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேக ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
அதுமட்டுமின்றி, 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களின் வகுப்பறைகளுக்கு இணைய வசதியுடன் கணினி வழங்கப்படும்.
மேலும், மலேசியாவில் உள்ள தன்னார்வ அமைப்பு உதவியுடன் தமிழகத்தில் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க மடிக்கணினி எனப்படும் "டேப்" வழங்கப்படும். இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment