வாசிப்பைக் கொண்டாடும் ஒரு முன்னுதாரணப் பள்ளி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 21, 2019

வாசிப்பைக் கொண்டாடும் ஒரு முன்னுதாரணப் பள்ளி

வாசிப்பைக் கொண்டாடும் ஒரு முன்னுதாரணப் பள்ளி

ஒருவரிடம் உள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே
உண்மையான கல்வி என்றார் காந்தி. ‘ஒரு ஆசிரியரின் பணியானது குழந்தைகள் மீது கருத்துக்களையோ கட்டுப்பாடுகளையோ திணிப்பதல்ல. சரியான சமூகச் சிந்தனையைக் குழந்தைகளிடம் விதைப்பவர்கள்தான் ஆசிரியர்கள்’ என்றார் கல்வியாளர் ஜான் டூவே. ஒரு சிறந்த பள்ளிக்கான, சிறந்த கல்வி முறைக்கான, சிறந்த ஆசிரியருக்கான என்னென்ன விஷயங்களையெல்லாம் இன்னும் முன்வைக்கலாமோ அவை எல்லாவற்றையும் சுவீகரித்துக்கொள்ள முயல்கிறது திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி பள்ளி.
பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளை சமூகப் பிரச்சினைகளிலிருந்து துண்டித்து, பாடப்புத்தகங் களில் மூழ்கடிக்கும் கலாச்சாரம் எங்கும் சூழ்ந்து கொண்டிருக்கும் நாட்களில், வாசிப்பு இயக்கத்தின் வழி மாணவர்களிடம் சமூக அக்கறையையும் பொது அறிவையும் வளர்த்து, அரசியல்மயப்படுத்துவதில் அக்கறையை வெளிப்படுத்துகிறது இந்தப் பள்ளி.
வாசிப்பு எனும் ஆயுதம்
ஒருவரின் மனதையும் அறிவையும் விசாலப்படுத்து வதில்தான் உண்மையான கல்வி அடங்கியிருக்கிறது. மனதையும் அறிவையும் விசாலப்படுத்தும் வாசிப்பு இயக்கத்தை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்து இருக்கிறது எஸ்ஆர்வி பள்ளி. பல்வேறு துறை சார்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களோடு நவீன இலக்கியங்களின் பல்வேறு வகைமைகளிலும் உள்ள புத்தகங்களை உள்ளடக்கிய அற்புதமான நூலகத்தைக் கொண்டிருக்கிறது இப்பள்ளி. 10-க்கும் மேற்பட்ட தினசரிகள் வாங்குகிறார்கள். இதனால், சில குழந்தைகளுக்கு நான்கைந்து நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. வெவ்வேறு துறை சார்ந்த 40-க்கும் மேற்பட்ட இதழ்கள் ஒவ்வொரு மாதமும் இந்நூலகத்துக்காக வாங்கப்படுகின்றன. இந்தப் பிரமாதமான சேகரிப்புகளை இப்பள்ளி எப்படிப் பயன்படுத்துகிறது என்பதில்தான் அதன் தனித்துவம் ஒளிந்திருக்கிறது.
பத்திரிகை வாசிப்பைப் படிப்பின் ஒரு பகுதியாகப் பாவிக்கிறார்கள். ‘இந்து தமிழ்’ நாளிதழை வாசிப்பதும், அவற்றை ஒட்டி விவாதிப்பதும் வகுப்பறைகளில் நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்றொரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்கள். முன்னாள் மாணவர் ஒருவரும் இந்நாள் மாணவர் ஒருவரும் புத்தகங்கள் குறித்து அறிமுகப்படுத்திப் பேசும் நிகழ்ச்சி இது. பிறகு, ஒரு சிறப்புப் பேச்சாளர் தன் உரையை வழங்கியதும் மாணவர்களோடு ஒரு உரையாடல். இந்நிகழ்ச்சிகளையெல்லாம் மாணவர் களே ஒருங்கிணைக்கிறார்கள். 13 ஆண்டுகளாக ஒரு மாதம்கூட இந்நிகழ்வைத் தவிர்த்துவிடாத இப்பள்ளி, இதுவரை 150-க்கும் மேற்பட்ட கூட்டங்களை ஏற்பாடுசெய்திருக்கிறது. அதாவது, 150-க்கும் மேற்பட்ட கலை இலக்கிய ஆளுமைகளைப் பள்ளிக்கு அழைத்துவந்து உரையாட வைத்திருக்கிறது.
15 நாட்களுக்கு ஒருமுறை எல்லா மாணவர் களுக்கும் புத்தகம் தந்து வாசிக்கச்சொல்லி, அதுகுறித்து அவர்களது புரிதலை நான்கு வரியிலாவது எழுதச்சொல்லும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு எழுத்தாளரை அழைத்துவந்து எப்படி வாசிக்க வேண்டும் என மாணவர்களுக்குச் சொல்லித்தருகிறார்கள். சரஸ்வதி மஹால், ‘ஞானாலயா’ நூலகம் எனப் பல்வேறு முக்கியமான நூலகங்களுக்கும் மாணவர்களை அழைத்துச்செல்கிறார்கள். பள்ளியில் நடக்கும் எல்லா விழாக்களிலும் புத்தகங்களைத்தான் பரிசளிக்கிறார்கள்.
உண்மையான பிரபலங்கள்
வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகளை அழைத்துவந்து பேச வைக்கிறார்கள். இங்கே வரும் எழுத்தாளர்களும் பிற துறை ஆளுமைகள் ஒவ்வொருவரும் அந்தந்தத் துறைகளின் ஜாம்பவான்கள். பிரபலங்கள் என்றால் அவர்கள் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் அல்ல, இவர்கள்தான் என்று மாணவர்களின் மனதில் பதியச்செய்கிறார்கள். பள்ளிக்கு ஆளுமைகள் செய்யும் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் விதமாகவும், தமிழ்நாட்டுக்குப் பங்களிக்கும் முக்கியமான கலைஞர்கள், படைப்பாளிகள், பல்துறை வல்லுநர்களை அடையாளம் காணும் விதமாகவும் 10 ஆண்டுகளாக ‘அறிஞர் போற்றுதும்! அறிஞர் போற்றுதும்!’ நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் ‘வாழ்நாள் தமிழ் விருது’, ‘தமிழ் இலக்கிய விருது’, ‘படைப்பூக்கத் தமிழ் விருது’, ‘சமூக நோக்கு விருது’ வழங்கிக் கெளரவிக்கிறார்கள். இதுவரை இந்த விருதுகள் யாருக்கெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதே இவர்கள் செல்லும் பாதையைத் துலக்கமாகப் புலப்படுத்தும். அசோகமித்திரன், மனோகர் தேவதாஸ், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், எஸ்.வி.ராஜதுரை, அம்பை, இந்திரா பார்த்தசாரதி, ம.இலெ.தங்கப்பா, பி.எஸ்.ராகவன், அருணன் ஆகியோர் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றிருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு நிகராக ஆசிரியர்களையும் தயார்படுத்தும் எஸ்ஆர்வி பள்ளியின் அக்கறையோ மெச்சத்தக்கது. கோடை விடுமுறையில் மாணவர்களுக்குத்தானே சிறப்பு முகாம்களைப் பார்த்திருப்பீர்கள்? இங்கே ஆசிரியர்களுக்காக நடத்துகிறார்கள். அதில் ‘இந்து தமிழ்’ நடுப்பக்கக் கட்டுரைகளை வைத்து விவாதிக்கிறார்கள். ‘கனவு ஆசிரியரை நோக்கி’ என்பது இவர்கள் பயணத்தின் இலக்கு. அரசியல், சினிமா, சட்டம், ஆண்-பெண் உறவு, உலகம் தொடர்பான அறிவு, விவசாயம், சுற்றுச்சூழல், சாதி, மதம் என எந்தெந்த வழிகளிலெல்லாம் மாணவர்களைத் தயார்படுத்த நினைக்கிறார்களோ அதிலெல்லாம் முறையாக ஆசிரியர்களைத் தயார்படுத்துகிறார்கள்.
கனவுச் சமூகம்
12 லட்சம் வரைக்கும் புத்தகங்கள் விற்பனையாகும் வெற்றிகரமான புத்தகத் திருவிழா, பள்ளியைத் தாண்டி வாசிப்பை ஊக்குவிக்கும் ‘திருச்சியே வாசி’ வாசிப்பு இயக்கம், விடுதி மாணவர்களுக்கான ‘துளிர்’ அமைப்பு, குழந்தைகளுக்குத் தேவையான கதைகளை எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி அவர்களே பதிப்பிக்கும் அதிசயம், இசை, ஓவியம், நாடகம், தமிழ் வாசிப்பு, பெண்கள் குறித்த பார்வை, உணவு, மனநலம், அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல், என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு ஆளுமையையும், பயிற்சிபெற்ற ஆசிரியர்களையும் நியமித்து மாணவர்களைச் செழுமைப்படுத்துதல் என்று இந்தப் பட்டியல் மிகப் பெரியது.
ஒரு பெரும் ஆசிரியர் படையுடன் இந்த முயற்சிகளுக்கான பின்னணியில் இருப்பவர்கள் பள்ளி நிர்வாகி சத்தியமூர்த்தியும், முதல்வர் துளசிதாசனும். “அரசுப் பள்ளிகளுக்கு இணையாகத் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் காலம் இது. ஆனால், எங்கோ ஓரிடத்தில் சமூகத்துடனான பிணைப்பில் தனியார் பள்ளி மாணவர்களிடம் ஒரு விலக்கத்தை எல்லாக் கல்வியாளர்களுமே சுட்டிக்காட்டுகிறார்கள். பாடப்புத்தகம் – தேர்வில் காட்டப்படும் அதீத அக்கறையின் வெளிப்பாடுதான் அது. நாங்கள் அந்தக் குறையைப் போக்க வாசிப்பு இயக்கத்தையும் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் இயக்கத்தையும் ஒரு கருவியாகக் கையில் எடுத்தோம். சமூகத்தில் நல்ல முன்னுதாரணங்களை அவர்கள் முன் நிறுத்துகிறோம். அவர்களைக் கொண்டாடுவதன் வாயிலாக அவர்களுடைய பெருமதிப்பை இளைய சமூகத்துக்குப் புரியவைக்கிறோம். வாசிப்பு இரு தரப்பையும் இணைக்கும், உறவில் வைத்திருக்கும் பாலமாகிறது” என்கிறார்கள் இருவரும்.
நல்ல புரிதல். நல்ல முயற்சி. நல்ல முன்னுதாரணம்.
- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

THANKS TO THE TAMIL HINDU NEWS PAPER

No comments:

Post a Comment