சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கச் சட்டங்கள் மட்டும் போதுமானதல்ல - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 21, 2019

சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கச் சட்டங்கள் மட்டும் போதுமானதல்ல

சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கச் சட்டங்கள் மட்டும் போதுமானதல்ல

இந்தியத் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய சமூகப்
பொறுப்புணர்வுக் கடமையை நிறைவேற்றுவதைக் கட்டாயமாக்கும் வகையில், நிறுவனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனங்களாகத் தீர்மானித்து சமூக சேவைகளில் ஈடுபட்டால் அதில் ஈடுபாடு இருக்கும். அரசு கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டால் ஈடுபாடு வருமா என்ற கேள்வியே எழுகிறது.
நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) செயல்பாடுகளுக்காக நிறுவனங்கள் தங்களுடைய சராசரி லாபத்திலிருந்து 2% தொகையை சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்த குழுவை நியமிக்க வேண்டும் என்று நிறுவனச் சட்டங்களின் 135-வது பிரிவில் முன்பு சாதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பல நிறுவனங்கள் இப்படி லாபத்தைத் தனியாக ஒதுக்கவில்லை அல்லது ஒதுக்கிய பிறகு செலவிடவில்லை, அல்லது முழுத் தொகையையும் செலவிடவில்லை என்ற தகவல்களுக்குப் பிறகு இச்செயலைக் கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. இப்படி ஒதுக்கிய நிதியை மூன்று ஆண்டுகளாகச் செலவிடவில்லை என்றால், அதை மத்திய அரசின் கருவூலத்துக்குச் செலுத்தும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தொகையைச் செலவிடுமாறு மத்திய அரசு உத்தரவிடவும், அப்படிச் செய்யாவிட்டால் தண்டிக்கவும்கூடத் திருத்தம் வழிசெய்கிறது.
இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்ற அதன் நோக்கத்தில் தவறில்லை. அதற்கு முன், ‘எல்லா தொழில் நிறுவனங்களும் தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம், படிகள், இதர வசதிகளைச் செய்து தர வேண்டும். தொழிலாளர் சட்டங்களையும் ஈட்டுறுதி, காப்புறுதித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
பங்குகளை வாங்கிய பொதுமக்களுக்குச் சேர வேண்டிய லாப ஈவுத் தொகைகளைக் காலாகாலத்தில் வழங்க வேண்டும். நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரிகளை நிலுவை இல்லாமல் செலுத்த வேண்டும்’ என்ற சூழலை உருவாக்கினாலே நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புணர்வுக் கடமையை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாகக் கருதிவிடலாம்.
வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் என்பது பெருமளவில் ஏட்டளவில் என்ற வகையில்தான் இருக்கிறது. ஏட்டளவில் மேலும் மேலும் சட்டங்களை இயற்றுவதிலும் கட்டாயப்படுத்துவதிலும் காட்டும் வேகத்தைக் கொஞ்சம் நாடும், மக்களும் தொழில் துறையினரிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை அவர்களுக்கு அரசு உணர்த்தும் வேலைகளில் காட்டலாம் என்று தோன்றுகிறது.
அறச்செயல்பாடுகளில் முன்னிலையில் நிற்கும் டாடாக்கள், அசிம் பிரேம்ஜி போன்றோருக்கு அரசு கொடுக்கும் கௌரவம், அங்கீகாரத்தின் வழியாகவும் அதை வெளிப்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேல் சமூக பொறுப்புணர்வுக் கடமைக்காக ஒதுக்கிய நிதியை ஏன் செலவிடவில்லை என்று நிறுவனங்களைக் கேட்கும் மத்திய அரசு, தாம் வசூலித்துவரும் பல்வேறு கூடுதல் தீர்வைகளை அந்தந்தத் தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. இதிலும் அந்தச் சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

THANKS TO THE TAMIL HINDU NEWS PAPER

No comments:

Post a Comment