தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு ஃபைபர்நெட் கழக மேலாண்மை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக கமல் கிஷோர் தற்போது மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநர் மற்றும் பால்வளத்துறை ஆணையராகவும் இருந்த என்.சுப்பையன் தற்போது கூட்டுறவு சங்கப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றும், ராகுல் நாத் செங்கல்பட்டு ஆட்சியராகவே தொடர்வார் என்றும் புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் கூட்டுறவு சங்கப் பதிவாளராக நியமனம் செய்யப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்றும், மாறாக அவர் தூத்துக்குடி ஆட்சியராகவே பணியில் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஆட்சியர் வினீத், பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
சமீபத்தில் முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்த த.உதயச்சந்திரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, நிதித் துறைச் செயலராக அறிவிக்கப்பட்டார். தற்போது உதயசந்திரனுக்கு தொல்லியல் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரத் துறைச் செயலராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு சிறப்பு திட்டம் செயலாக்கத் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment