மதுரையில் கடந்தாண்டில் போக்குவரத்து சிக்னல், பஸ் ஸ்டாண்ட்களில் பிச்சை எடுத்த 48 குழந்தைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடமும், கல்விநிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைக்குழந்தைகளை வாடகைக்கு எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பதாகவும், சிறுவர், சிறுமிகளை இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும், சைல்டு லைன் 1098க்கு தொடர் புகார்கள் வந்தன. 2014 - 15ல் மட்டும் 48 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சைல்டு லைன் இயக்குனர் ஜிம் ஜேசுதாஸ் கூறியதாவது:
இவர்கள் பெரும்பாலும் காளவாசல், ஆண்டாள்புரம் பாலம், திருப்பரங்குன்றம், மீனாட்சியம்மன் கோயில், மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தனியாக சென்று பிச்சை எடுக்க பழக்கியுள்ளனர். இதில் மதுரை சக்கிமங்கலம், கல்மேடு பகுதி குழந்தைகள்தான் அதிகம். இப்படி மீட்கப்பட்ட இரண்டு பேர் தற்போது கல்லுாரியில் படிக்கின்றனர். ஆறு பேர் பள்ளியில் படிக்கின்றனர்.
இந்த எட்டு பேரை கொண்டு மற்ற குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மே மாதத்தில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கைக்குழந்தைகளை உரிய ஆவணங்களை காண்பிக்கும் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். கடந்தாண்டு மூன்று பெற்றோரை குழந்தைகள் நலக்குழுமத்தின் கீழ் ரிமாண்ட் செய்துள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment