உலகத் தரத்தில் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 26, 2015

உலகத் தரத்தில் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ்

உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று, புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.
காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். பல்கலைக்கழக வேந்தர் எஸ்.ஜெயராம் ரெட்டி முன்னிலை வகித்தார்.
புதுதில்லி, பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
கல்வித் துறையில் இன்றியமையாதவர்களாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்றால், அவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான்.
உலகின் சிறந்த ஆசிரியர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதிலும், உலகத்தரம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வி அளிப்பது தொழில் அல்ல; அது ஆத்மார்த்தமான வாழ்வின் தொடக்கம். தனிமனித வளர்ச்சியை நிறைவு செய்வதிலும் கல்வியே சிறந்த காரணியாகத் திகழ்கிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்கவும், செல்வத்தைப் பெருக்கவும் பல துறைகளில் மாணவர்களை உருவாக்க வேண்டும். அதற்கேற்ற பாடத் திட்டங்களை பல்கலைக்கழகங்கள்தான் உருவாக்க முடியும் என்றார்.
இந்த விழாவில் 1,194 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 35 பேருக்கு தங்கப் பதக்கமும், 28 மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டன.
"கல்வி அறிவை தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்'
காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழாவில், சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:
காஞ்சிபுரத்தில் ஆதிசங்கரர் வழிவந்த சங்கர மடத்தின் சார்பில், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, கல்விச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. கல்வியுடன் மாணவர்களுக்கு நல்லொழுக்கமும், பண்பாடும் கற்பிக்கப்படுகின்றன.
கல்வியின் மூலம் பெற்ற அறிவை தேசத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் பயன்படுத்த வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வி இன்றியமையாதது. பெற்ற கல்வியை நாட்டின் முன்னேற்றத்துக்காக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
மாணவர்கள் நல்ல பண்புகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி அடைய முடியும் என்றார்.

No comments:

Post a Comment