Problems for APPOINTED TEACHERS with out TET( AFTER 23/8/2010) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 29, 2015

Problems for APPOINTED TEACHERS with out TET( AFTER 23/8/2010)

பயத்துடனும், மன உளைச்சலுடனும், கண்ணீருடனும் தினம் தினம் நாங்கள்... 23/08/2010 ற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் எங்களின் கண்ணீர் சிந்தும் நாட்கள் தீர வழி தேடியே நீண்ட வாழ்க்கை  பயணம்.

       எங்களின் வாழ்க்கை எதிர் வரும் 2016 நவம்பர் 15 ல் முடிவுக்கு வரும் என தெரிந்தும் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றோம். எம் குறைகளை கேட்க கூட ஆள் இல்லை... பிறகு எப்படி தீர்வு கிடைக்கும்?

          23/08/2010 ற்கு முன்பு மிகுந்த ஆவலுடன் ஆசிரியர் பணிக்காக பயின்று வெற்றிகரமாக பட்டம் பெற்று வாழ்க்கையில் ஓரு புதிய விடியல் கிடைக்கும் என பல நாட்கள் காத்திருந்து 23/08/2010 ற்கு பிறகு ஆசிரியர் தகுதி தேர்வின் வீரியத்தை தமிழக அரசே முறைப்படி அறிவிக்காத சூழலில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்று இன்று பாவப்பட்டவர்களாக பணியாற்றி வருகின்றோம்.

         அரசு போட்டி தேர்வு அல்ல...அரசு தகுதி தேர்வு என்று எப்போதும் கூறும் தமிழக அரசு கடந்த  ஆண்டுகளில் நாங்கள் தகுதி இல்லாமல் பணியில் உள்ளோம் என 15/11/2016க்கு பிறகு  எப்படி நிருபிக்கப் போகிறது?

         அரசு வரையறைப்படி பணி நியமனம் பெற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிந்து வரும் நாங்கள் கடந்த காலங்களில் எங்கள் பாடங்களில் முழு தேர்ச்சி கொடுத்து இருந்தாலும் இன்றளவும் நாங்கள் ஆசிரியர்களாக யாராலும் மதிக்கப்படுவதில்லை.

          தகுதியற்ற ஆசிரியர்கள் மூலமாக கடந்த ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களும் தகுதி இழக்க வாய்ப்பு உண்டோ?  கடந்த இரண்டரை வருடங்கள் TET பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. கல்வி துறை ஆசிரியர்கள் தேர்வு முறையில் ஒரு சில குழப்பங்கள் இருப்பது மறுப்பதற்கும் இல்லை. திடீரென ஒரு நாள் எங்களை பணியில் இருந்து நீக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் கெடுவது மட்டுமல்ல... வாழ்க்கையே கெட்டு விடும் என்பது தானே உண்மை.

            அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள சுமார் 8000 ஆசிரியர் குடும்பங்கள் தமிழக அரசின் ஒரு கொள்கை முடிவுக்கு இன்றளவும்  காத்துக்கொண்டு உள்ளனர். 23/08/2010க்கு பிறகு பணியில் சேர்ந்த எங்களில் பலர் இன்னும் ஊதியம் பெறாத நிலையிலும், வளரூதியம், ஊக்க ஊதியம், தகுதி காண் பருவம் நிறைவு பெறாத நிலை, அரசின் சலுகைகள் முறையே பெற இயலாத சூழல்...இதை எல்லாம் தாண்டி நாங்கள் தகுதி பெறாத ஆசிரியர்கள் என மற்றவர்கள் சொல்ல அதை கேட்கும் போது இதயத்தின் ஆழத்தில் ஏற்படும் வலியை எடுத்துக் கூற வார்த்தைகள் இல்லை.
மனதளவில் எங்கள் எதிர்பார்ப்புக்களையும், பிரட்சணைகளையும் முன் நிறுத்தி மிகப்பெரிய அளவில் போராடும் திறன் எங்களிடம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அரசியல் அறிஞர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் எமது கண்ணீர் படிந்த வேண்டுகோள் யாதெனில்...

            23/08/2010 ற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் தகுதி தேர்வு இல்லாது பணியில் சேர்ந்த எங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளித்து கடந்த கால கல்வி பயணத்தை ஆராய்ந்து, தேவைப்படின் பயிற்சிகள் பல கொடுத்து நிரந்தர பணியாக மாற்றி அரசாணை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு...

        23/08/2010 ற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.

- Article By Mr. Chandru.

No comments:

Post a Comment