மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்தை 31.1.2016-க்குள் செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "பெரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்தை உடனே செலுத்த வேண்டியதில்லை.
அவர்கள் தற்போது செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை 31.1.2016-க்குள் செலுத்தலாம் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு காலதாமதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு எவ்வித அபராதத் தொகையும் வசூலிக்கப்படமாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வை ஒத்திவைத்து அரசு பிறப்பித்த உத்தரவு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், "மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திட ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.
சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிய வருகிறது.
அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment