டிச.8 - வானிலை முன்னறிவிப்பு: ஒரு வாரத்துக்கு மழை நீடிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 8, 2015

டிச.8 - வானிலை முன்னறிவிப்பு: ஒரு வாரத்துக்கு மழை நீடிப்பு

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் தேதி தொடங்கியது. ஆனால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை அக்டோபர் 28-ல் உருவாகி, மழை பெய்ய தொடங்கியபோதுதான், பருவமழை தொடக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பருவமழைக்காலம் தொடங்கி இன்று வரையில் தமிழகம் முழுவதும் சராசரியாக 64 செ.மீ மழை பெய்துள்ளது. ஆனால், இயல்பாக இக்காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை 39 செ.மீ மட்டுமே. தொடர்ந்து தற்போதும் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஒரு வாரம் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இன்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, "லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது லட்சத்தீவு மற்றும் குஜராத் கடல் இடையே நிலைகொண்டுள்ளது.

சமீபத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையானது, காலை (இன்று) நிலவரப்படி இலங்கை மற்றும் வடதமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக காரைக்காலில் 16, குடவாசல் மற்றும் நெல்லை பாபநாசத்தில் 13, திருவாரூர், நாகை, நன்னிலத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர இதர கடலோர மாவட்டங்களில், தெற்கு உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யலாம்.

தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு இதே நிலை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யலாம். மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார் அவர்.

மேலும், பி.பி.சி மற்றும் இதர சில நிறுவனங்கள் தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் அதிகளவு மழை இருக்கும் என குறிப்பிட்டுள்ளது குறித்து கேட்டபோது, "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி அப்படி எதுவும் இல்லை.195 நாடுகள் வானிலையை ஆய்வு செய்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது. இந்த மழையானது ஒரு வாரத்துக்கு தொடரும்" என்றார்.

இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, தஞ்சை, வேதாரண்யம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரையின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாட்களாக மழை இல்லை. இதனால், நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

மழை மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ஏற்கெனவே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர, கனமழை காரணமாக, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment