இந்திய மாணவர்கள் உயர்கல்வி பெற இங்கிலாந்து வர வேண்டும். பட்டம் பெற்ற பிறகு அங்கேயே தங்கி வேலை செய்யலாம் என இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்து அறிவியல் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஜோ ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரி்ட்டன் அமைச்சர் ஜோ ஜான்சன் இதுதொடர்பாக பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்தியர்கள் கல்வி மற்றும் வேலைக்காக இங்கிலாந்து வர வேண்டும் என அழைக்கிறேன். படிப்பிற்காக இங்கிலாந்து வருவது அறிவை பெருக்கும். அறிவை கெடுக்காது. உயர் கல்வி பெறுவதற்கு உலகிலேயே இங்கிலாந்து தான் சிறந்த இடம். அறிவையும் திறமையையும் வளர்க்க இங்கிலாந்து பல்கலை, மற்றும் நிறுவனங்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.
எத்தனை இந்திய மாணவர்கள் வேண்டுமானாலும் இங்கிலாந்து வரலாம். இங்கிலாந்திற்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் படிப்பை முடித்த பிறகு, இங்கேயே தங்கி வேலை செய்யலாம். அதற்கும் எங்கள் சட்டதிட்டங்களில் வழிவகை செய்துள்ளோம். உயர்கல்வி, பல்கலைகழகங்கள், விஞ்ஞானிகள் என அனைத்து தரப்பிலும் இந்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறோம். கடந்த 6 ஆண்டுகளில் இதுகுறித்து பல புரிந்துணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நியூட்டன் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, தேம்ஸ் நதியை சுத்தம் செய்த அனுபவத்தை கொண்டு கங்கையை தூய்மை செய்யும் பணியில் இந்தியாவுடன் களமிறங்க உள்ளோம். இதே போன்று காற்று மாசுபாட்டை நீக்குவதிலும் இங்கிலாந்து சிறந்து விளங்குவதால், அதிலும் இந்தியாவுக்கு துணை நிற்க உள்ளோம்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சமீபத்தில், இந்திய பல்கலை, உலகின் டாப் இடத்தை பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து விஞ்ஞானிகள் இந்தியாவில் பல்கலை, தரங்களை உயர்த்த உதவ தயாராக உள்ளன. உலகின் டாப் 10 கல்வி நிறுவனங்களில் 4 இடங்களை இங்கிலாந்து பல்கலை, பிடித்துள்ளன. டாப் 100 பல்கலை,களில் 38 இங்கிலாந்து பல்கலை,கள் உள்ளன. இதனாலேயே இந்தியாவில் உயர் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு உதவ நாங்கள் முன் வந்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment