எட்டாம் வகுப்பைப் படித்து முடிப்ப தற்குள் 39% ஆண் குழந்தைகள், 33% பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைநின்று போகும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. இத்தனை இளம்
பிள்ளைகளின் படிப்பு தடைபட்டுப்போக ஏழ்மை மட்டும் காரணம் அல்ல. வறுமைப் பிடியில் இருக்கும் குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளையே தொழிலாளர்கள் ஆக்குகிறார்கள் என்பது பயங்கரமான உண்மைதான். அதற்கு அடுத்தபடியாகப் படிப்பில் ஈடுபாடின்மையினாலும், தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதாலும் பள்ளிப் படிப்பை லட்சக்கணக்கான இந்தியக் குழந்தைகள் இழக்கிறார்கள் என்கிறனர் ஆய்வாளர்கள்.
யார் பொறுப்பு?
இத்தனைக்கும் இந்தியாவில் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கத்துக்குப் பிறகு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் கிடைத்த வரம் பலருக்குப் பாதியில் பறிபோவது எவ்வளவு கொடுமை?
படிப்பில் ஈடுபாடு ஏற்படாமல் போவது குழந்தையின் தவறல்ல. படிப்பு இடைநின்றுபோவதற்குக் காரணம் குழந்தைகள் அல்ல. அவர்களுக்குத் தரமான கல்வியை சுவாரசியமாகக் கொடுத்து ஆர்வத்தை உண்டாக்க வேண்டியது கல்வி அமைப்பின், கல்வியாளர்களின் கடமை. அதைச் செய்யத் தவறும்போது குழந்தைகள் வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதை உணர்ந்து இணையத்தில் ஆசிரியர் ஆனவர் ரோஷினி முகர்ஜி.
என்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம்?
தேர்வு என்கிற வார்த்தையே நம்மை அச்சுறுத்துகிறதல்லவா? இனியும் தேர்வைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்பதை நிருபிக்கின்றது இவர் உருவாக்கிய www.examfear.com.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடங்களை எளிமையான வடிவில் இலவசமாகச் சொல்லித் தருகிறார் ரோஷினி. 2011-ல் தொடங்கப்பட்ட இந்த வலைதளம் மூலம் மாதந்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோஷினியிடம் ஆன்லைனில் பாடம் கற்கிறார்கள்.
examfear.com-ல் மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.
முதல் பகுதி- ‘Exam Fear Videos’.
யூடியூபைப் பயன்படுத்தி ‘எக்ஸாம் ஃபியர் வீடியோஸ்’ என்கிற ஆன்லைன் கல்வி வீடியோக்களை உருவாக்குகிறார் ரோஷினி. இதில் பாடங்களை எளிமையான முறையில் நிதர்சன உலகில் பொருந்தும் உதாரணங்களுடன் அவரே விளக்குகிறார். கேலி சித்திரங்கள், ஓவியங்கள், ஒளிப்படங்கள், வீடியோ காட்சிகள் என இதில் படிப்பை விளையாட்டாக உணரச் செய்யும் பல அம்சங்கள் உள்ளன.
இரண்டாவது பகுதி- ‘Ask Questions’.
இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் பாடங்கள் தொடர்பாகக் கேள்விகளை, சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு விளக்கம் பெறலாம்.
மூன்றாவது பகுதி- ‘Refer Notes’.
ஒவ்வொரு பாடப் பகுதிக்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஃபுளோ சார்ட், செயல்முறை உதாரணங்களோடு இந்தப் பகுதி எழுதப்பட்டிருப்பதால் தெளிவாகப் புரிந்து படிக்கலாம். நாம் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் நண்பர்களோடும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள ‘SHARE THESE NOTES WITH YOUR FRIENDS’ எனும் பிரிவு இதில் உள்ளது.
நான்காவது பகுதி- ‘Take a Test.’
ஆன்லைனிலேயே அதுவரை கற்ற பாடங்களில் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு தலைப்பிலும் 10 கேள்விகளுக்கு objective type முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
இத்தனை விஷயங்களையும் அற்புதமாக வடிவமைத்து இலவசமாக அளிக்கிறார் ரோஷினி. பள்ளிப் பாடங்களைத் தவிர அறிவியல் சோதனைகள் பலவற்றையும் எளிய வகையில் வீடியோ பதிவாக இவர் உருவாக்கியுள்ளார். ‘Practical Video Series’ என்கிற தலைப்பில் அவரே திரையில் தோன்றிப் பேட்டரி ஹோல்டர் செய்வது எப்படி, ஸ்விட்ச் செய்வது எப்படி, நேர் கோட்டிலேயே ஏன் ஒளி பாய்கிறது போன்றவற்றை மாணவர்கள் தானாகச் சோதித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளச் செயல்முறை வீடியோக்களை உருவாக்கியுள்ளார்.
யார் இவர்?
மேற்கு வங்கத்தில் பிறந்த ரோஷினி பள்ளி நாட்களிலிருந்தே படிப்பில் படு சுட்டி. ஆனாலும் இயற்பியல் அவரை பயமுறுத்தியது. ஒரு முறை ‘சுவாரசியமாக இயற்பியல் படிக்கலாம் வாங்க’ என்கிற பயிலரங்கில் பங்கேற்ற பிறகு சிறுமி ரோஷினிக்குள் மிகப் பெரிய மாற்றம் உண்டானது. இயற்பியல் எத்தனை குதூகலமானது என்பதை உணர்ந்தவர் மேற்படிப்பிலும் இயற்பியலைத் தேர்ந்தெடுத்தார். டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் முதுகலை இயற்பியல் பட்டம் பெற்றவுடன் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். ஆனால் கல்வி மீதான ஈர்ப்பு எப்படியாவது ஆசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கியது.
தகவல் தொழில்நுட்பத் துறை அனுபவம் இணையத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை தந்தது. ரோஷினி பெங்களுருவில் குடியேறிய பிறகு அவருடைய வீட்டுப் பணிப் பெண் தன்னுடைய குழந்தைகள் புறநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதால், தரமான கல்வி கிடைக்காமல் சிரமப்படுவதாக வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்.
ஆக கல்வியை இலவசமாகக் கொடுத்தால் மட்டும் போதாது. அந்தக் கல்வி தரமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு தரமான கல்வி என்பது விலை உயர்ந்ததாக உள்ளது. ஏன் தரமும் இலவசமும் கைகோக்க முடியாது எனச் சிந்திக்கத் தொடங்கிய ரோஷினி தனக்குக் கைவரப் பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத் தரமான கல்வியை இலவசமாகக் கொடுக்க examfear.com உருவாக்கினார். இதன் மூலம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை மேலும் எளிமை படுத்தி தர ஆரம்பித்தார்.
அர்ப்பணிப்பு தந்த வாய்ப்பு
ஆரம்ப நாட்களில் ஐ.டி. வேலையைச் செய்தபடியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்தவருக்கு, “நீங்கள் 10 நிமிடங்களில் விளக்கிப் புரியவைத்ததை என்னுடைய ஆசிரியரால் ஒரு வாரம் ஆனாலும் விளக்க முடியாது” என எழுதியிருந்தார் ஒரு மாணவர். இதேபோல, சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலைச் சேர்ந்த பல குழந்தைகள் ரோஷினியிடம் அவருடைய கற்பித்தல் முறை குறித்து மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியபோது இதுதான் தன்னுடைய களம் என முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்தார்.
2014-லிருந்து முழு நேரமும் ஆன்லைனில் பாடம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டார். இதுவரை 5000 கல்வி வீடியோக்களை ரோஷினி தயாரித்திருக்கிறார். 1.5 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்திருப்பதால் யூடியூபில் விளம்பரங்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் ரோஷினிக்கு வருமானமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 2016-ன் தொடக்கத்தில் ‘100 சாதனைப் பெண்கள் விருது’ இந்தியக் குடியரசுத் தலைவரால் ரோஷனிக்கு அளிக்கப்பட்டது. இப்போது தரமான கல்வி குறித்த அக்கறை கொண்ட சில இளைஞர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு கல்வியைக் கொண்டாட்டமாக மாற்றுகிறார் இந்த யூடியூப் ஆசிரியை!
No comments:
Post a Comment