பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு
நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது.இத்திட்டத்தில், மாணவர்களின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு, முகவரி, பெற்றோரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவில், மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு, புதிய மாணவர்களின் விபரங்களை சேர்த்தல், பள்ளிமாறிய மாணவர் விபரங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, பள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த பணிகளை முடிக்கவில்லை.
ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி அளிக்கும், எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கணினியை இயக்கவும், மாணவர் விபரங்களை பதியவும் பயிற்சி அளிக்கவில்லை என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். பயிற்சி அளிக்காமல், எமிஸ் திட்டத்தில் மாணவர் பெயர்களை பதிவு செய்ததால், பல மாவட்டங்களில், மாணவர்களின் பெயரும், அவர்கள் படிக்கும் பள்ளியும் மாறி, மாறி பதிவாகி உள்ளது. அதனால், ஆசிரியர்கள், தனியார் கணினி மையங்களை அணுகி உள்ளனர். கட்டண அடிப்படையில், அங்குள்ள ஊழியர்கள், கல்வித் துறையின் இணையதளத்தில், பெயர்களை பதிவு செய்கின்றனர். வரும் காலங்களிலாவது, இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment