பள்ளிக் கல்வி கலைத்திட்டத்தில் 'வயல் விவசாயம்'- அரசுக்கு பல்கலை. பாடத்திட்ட குழு உறுப்பினர் யோசனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 2, 2017

பள்ளிக் கல்வி கலைத்திட்டத்தில் 'வயல் விவசாயம்'- அரசுக்கு பல்கலை. பாடத்திட்ட குழு உறுப்பினர் யோசனை

விவசாயம் கிராமப்புற மக்களுக்கானது என்பதை மாற்றி எதிர்காலத்தில் படித்த இளைஞர்களும் கையில் எடுக்க, பள்ளிக்கல்வி கலைத்திட்டத்தில் 'வயல் விவசாயம்' கொண்டு வர வேண்டும் என பல்கலைக் கழகங்களின் கல்வியியல் பாடத்திட்ட குழு உறுப்பினரும், காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியருமான ஜாகிதா பேகம் தெரிவித்துள்ளார்.

நவீன யுகத்தில் கணினிக்கும், செல்பேசிக்கும், இணையத்திற்கும் தரப்படும் முக்கியத்துவம் விவசாயத்துக்கு கிடைப்பதில்லை. கடல் தாண்டி உழைக்க தயாராக இருக்கும் படித்த இளை ஞர்கள், விவசாயம் செய்ய முன்வருவதில்லை. அதற்கு விவசாயம், பற்றிய அடிப்படை அறிவு, அதன் வருவாய் ஆதாரம், வர்த்தகம் பற்றிய விவசாய நுண்ணறிவு இல்லாத கல்விமுறையே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

தற்போது மழையில்லாததால் இயற்கையும் சேர்ந்து விவசாயத்தை பழி வாங்கிவிட்டது. ஒருபுறம் வறட்சி, மறுபுறம் விவசாயத்தை புறக்கணிக்கும் இன்றைய தலைமுறையால் தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்து உணவு உற்பத்திக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு விவசாயம் என்பது கல்வியறிவு இல்லாத கிராமப்புற மக்களுக்கானது என்பதை மாற்றி, படித்த இளை ஞர்களும் விவசாயத்தை வருமானத்துக்கான துறைபோல் கையில் எடுக்க பள்ளிக் கல்வி கலைத்திட்டத்தில் விவசாயத்தை கொண்டுவந்து பாடத்திட்டத்தை மறு சீரமைக்க வேண்டும் என திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் ஜாகிதா பேகம் அரசுக்கு யோசனை தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

இயற்கையையும், வாழ்க்கை முறையையும் கற்றுத்தராத தற்போதைய கல்வி முறை மிக வேதனைக்குரியது. எழுத் தறிவையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு மனப்பாடம் செய்வதைத்தான் தற்போது கல்வி என்ற பெயரில் செய்து வருகிறோம். தற்போதைய காலகட்டத்தில் கல்வியை மீண்டும் வரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் நாட்டின் பண்பாட்டினையும், பாரம்பரியத்தையும் அறிவார்ந்த வழியில் கற்றுக்கொள்வதும், இயற்கையோடு இணைந்த வாழ்வினைத் கற்றுத்தருவதுமே கல்வியாகும். நாட்டின் கல்வி முறை பற்றிய திட்டங்களில் அரசியல் மற்றும் அதிகாரிகளின் குறுக்கீடும் இருக்கக்கூடாது.

பள்ளிகள், கல்லூரிகளில் கலைத்திட்டத்தை மறுசீரமைத்து திட்டமிடல் வேண்டும். ஐந்து முதல் பதினைந்து வயது வரை எத்தகைய கல்விமுறையை மாணவர்கள் படிக்கின்றனரோ அதை அடிப்படையாக கொண்டே அவர்கள் வாழ்க்கை முறை அமைந்து விடுகிறது. ஒரு சில சதவீதத்தினர் மட்டுமே விதிவிலக்காக கல்விக்கு அப்பாற்பட்டு சாதிக்கின்றனர். அதனால், கல்விமுறையை தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு சேர்க்கும் வகையில் கல்வியாளர்களும், அரசும் பள்ளிக் கல்வி கலைத்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆசிரியர் கல்வி திட்டம் மேம்பட, மேன்மையான ஆசிரியர்கள் கிடைத்திட அரசியல் அதிகாரங்கள் குறுக்கீடு இல்லாத கல்விமுறை நம் நாட்டுக்குத் தேவை. அதற்கு பள்ளிக் கல்வித் திட்டத்தில் முக்கியமாக இடம்பெற வேண்டியது விவசாயம்தான். வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், இயற்கை விவசாயத்தையும், தமிழகத்தில் பயிர் செய்யும் முறையும், கால்நடைகள் பராமரிப்பு பற்றியும் புத்தகங்களாக மட்டுமின்றி செயல்முறை கல்வியாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.

பள்ளிகளில் பல்வேறு சோதனைக்கூடங்கள் இருந்தாலும், ஒவ்வொரு பள்ளியிலும் 'வயல்' என்னும் வேளாண்மைக்கூடமும், கால்நடை வளர்ப்பும், பராமரிப்பும் தேவை. இந்த வயல் வெளி கல்வி முறை எல்கேஜி, யூகேஜி முதல் கற்றுத்தரப்பட வேண்டும். இந்த கல்வித் திட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை, நல்வாழ்வுக்கான பாரம்பரிய விஷயங்கள் முதலிய வற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கான கல்வித்திட்டங்களை கல்வியா ளர்களும், அரசும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இத்தகைய கல்விக்கூடங்களையும் மக்கள் வரவேற்க வேண்டும். மேற்கத்திய ஆதிக்கம் சார்ந்த கல்விமுறையை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment