கல்வித் துறைச் சிக்கல்களுக்கு முடிவு எப்போது? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 19, 2018

கல்வித் துறைச் சிக்கல்களுக்கு முடிவு எப்போது?

மிகவும் அவசியமான விஷயமான கல்விக்கு மிகக் குறைவாகத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 6% அளவுக்கு கல்விக்கு ஒதுக்க முயற்சிக்க வேண்டும் என்று டி.எஸ். கோத்தாரி கமிஷன் 1966-லேயே பரிந்துரைத்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜிடிபியில் 3%-க்கும் குறைவாகத்தான் ஒதுக்குகிறது மத்திய அரசு. கோத்தாரி கமிஷன் பரிந்துரைகளைத் தயாரித்த காலத்தில் நாடு நெருக்கடியான கட்டத்தில் இருந்தது. போர், அரசியல் நிச்சயமற்ற நிலை, பஞ்சம் போன்றவை நிலவின. பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட லட்சிய உணர்வுகள் மக்களிடையே மெல்ல கரைந்துகொண்டிருந்தன.
எந்த வகையில் பார்த்தாலும் இந்தியா இப்போது வளமான நாடு. முன்னேற்றத்தைப் பற்றித்தான் மக்களும் நினைக்கிறார்கள். வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே பொருளாதார நிலையில் மாறுதல் இருந்தாலும், கல்வி இன்றியமையாதது என்பது உணரப்பட்டிருக்கிறது. இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தும் 'தேசிய லட்சியமாக' கல்வி உருவாகவில்லை. கல்வியைப் பற்றி மத்திய பட்ஜெட் வெகுவாகப் புகழ்ந்தாலும் ஆண்டுதோறும் அதற்கு ஒதுக்கும் தொகை போதவே போதாது.
இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. உயர் கல்விக்கு ஒதுக்கிய தொகை குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதங்களைச் செப்பனிடும் வகையில் பெருந்தொகை ஒதுக்கப்படவில்லை. தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்த போதிய நிதி ஒதுக்கப்படும் என்பதும் நிச்சயமில்லை; கல்வி பெறும் உரிமை தொடரும் என்பதற்கான நிதியளிப்பும் கண்ணுக்கெட்டாததாகவே இருக்கிறது.
ஆசிரியர் பயிற்சிக் கல்வி
ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் முக்கியத்துவத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் வலியுறுத்தியிருக்கிறார். இது அபூர்வமானது, வரவேற்கத்தக்கது. ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் என்பவை கண்ணுக்குத் தெரியாததாக, கவனத்தை அதிகம் ஈர்க்காததாக இருக்கின்றன. போதிய அளவுக்கு உயர் நிலையில் அதன் மீது கவனம் செலுத்தப்படுவதில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் பல பொலிவிழந்துவிட்டன. 'பொதுக் கொள்கை' வகுப்பிலும் ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் முக்கியத்துவம் பெறவில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். வர்மா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இந்த உண்மையைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிக்கொணர்ந்தது. ஆசிரியர் கல்வி நிலையங்களின் பரிதாப நிலையையும், அவை தொடர்பான ஊழலையும் அது சுட்டிக்காட்டியது. வரம்பற்ற வணிகமயமும், அதிகாரவர்க்கத்தின் கெடுபிடிகளும் ஆசிரியர் கல்வித் துறையில் வளர்ச்சியே காண முடியாதபடி அதன் கழுத்தை நெரித்துவிட்டன.
ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியர் பயிற்சி பட்ட வகுப்பு மூலம், ஆசிரியக் கல்வியின் தரத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டிருப்பதை நிதியமைச்சர் அறிவித்தார். இந்தத் துறைக்குத் தேவைப்படும் நிதியை மத்திய அரசு செலவழிக்குமா என்ற கேள்விக்குப் பதில் இல்லை. இதுவரை கிடைத்துள்ள சமிக்ஞைகள் யாவும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி, தனக்கான தேவைகளைத் தானே பூர்த்திசெய்துகொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஏற்கெனவே ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் 'பணியிடைப் பயிற்சிக்கு' மட்டும் செலவிடத் தயாராக இருக்கிறது. பல்கலைக்கழகக் கல்வித் துறைக்கு வெளியே வழங்கப்படும் தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்குப் பெரிய சந்தை இருக்கிறது. 'கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசியப் பேரவை' (என்.சி.இ.ஆர்.டி.) வழங்கும் நான்காண்டு ஆசிரியர் பயிற்சிகள் நல்ல தரத்துடன் விளங்கும் என்றே நம்பப்படுகிறது. ஆனால், அதுவே பெருமளவில் மேற்கொள்ளப்படும்போது அதே தரம் பராமரிக்கப்படுமா என்று பார்க்க வேண்டும். உயர் கல்வி தொடர்பாகத் தனக்குள்ள பொறுப்பை அரசு உணர்ந்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
அதிகரிக்கும் பாதிப்புகள்
எல்லா நிலை கல்விக்கும் தேவைப்படும் ஆசிரியர்கள், அவரவர் பயிலும் உயர் கல்வி நிலையங்களின் தரத்துக்கேற்பவே நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பாதிப்படைகின்றனர். மழலையர் பள்ளிக்கூட ஆசிரியருக்குக் குழந்தைகள் உளவியல் பற்றிய இப்போதைய பாடங்கள் தெரிந்திருக்க வேண்டும். தொடக்கநிலை வகுப்புகளில் மொழிப்பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், குழந்தைகள் எப்படி படிக்கக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும், இரு மொழித் திறன்களை எப்படி வளர்ப்பது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பட்ட வகுப்புகளை நடத்தும் கலை-அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகம் உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புகளின் பற்றாக்குறை இடைநிலை ஆசிரியர்களைப் பாதிக்கிறது. அறிவியல் ஆய்வுக்கூடங்களும் போதிய ஆசிரியர்களும் இல்லையென்றால் வளரிளம் பருவ மாணவர்கள் அறிவியலைத் தெளிந்து படிக்கவே முடியாது. இவை போன்ற அடிப்படைக் காரணங்களால்தான் பள்ளிக்கூட ஆசிரியரின் கற்பிக்கும் திறனும் பின்னடைவைச் சந்திக்கிறது.
உயர் நிலைக் கல்வியைப் புதுப்பிக்கவும் புத்துயிர் ஊட்டவும் யஷ்பால் கமிட்டி பத்தாண்டுகளுக்கு முன்னால் அளித்த அறிக்கை, பட்ட வகுப்புக் கல்வியின் குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மேம்படுத்த பல பரிந்துரைகளையும் செய்தது. இப்பரிந்துரைகளை அமல்செய்வதென்றால் அரசின் நிதி ஒதுக்கீடும் பலமடங்காக அதிகரிக்க வேண்டும். அதற்குப் பிறகு அதிக நிதி ஒதுக்கீடும் இல்லை, உயர் கல்வியை மீட்கும் திட்டமும் இல்லை.
அரசின் அணுகுமுறை
கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி குறித்து இந்தியா ஏன் கவலைப்படவில்லை அல்லது ஏன் அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்ற நியாயமான கேள்வி எழுகிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு முதல் சில பத்தாண்டுகளில் அரசிடம் நிதியாதாரம் போதுமானதாக இல்லை; வெவ்வேறு உடனடித் தேவைகளுக்குச் செலவிட நேர்ந்தது. கல்வி என்பது சமூகத் தேவை என்பதால் மக்களிடமிருந்தே அதற்கான நிதியும் கிடைத்துவிடும் என்று கருதப்பட்டது. அரசினால் செலவிட முடியாத இடங்களில் தனியார் முதலீட்டிலும் கல்விச் சாலைகள் நடத்தப்படுவதை ஆதரித்தது. கல்வியை மேம்படுத்த எல்லா யோசனைகளையும் வரவேற்கும் அரசு, பணம் மட்டும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறது. இந்த அணுகுமுறை இன்னும் எத்தனை காலத்துக்கு நம்முடைய கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கும் என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது.
ஒன்று மட்டும் நிச்சயம். போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் கடந்த முப்பதாண்டுகளாக ஏற்பட்ட சேதம், நம்முடைய நீண்டகால தேசியப் பொருளாதார நலன்களுக்கும் சமூக லட்சியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுகளும் இளைஞர்களிடையே நிலவும் குமுறல்களும் ஊட்டமில்லாத உயர் கல்வி அமைப்புகளால் ஏற்பட்ட வாட்டங்களே. கல்வியை நாம் முன்னுரிமைத் துறையாக ஏற்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் 'குன்றா வளர்ச்சி' என்பதை அடைய முடியாது என்பது உறைக்க வேண்டும்!


x
x

No comments:

Post a Comment