தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 2, 2019

தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு
தமிழகத்தில் கடுமையான வெயில், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இடையே தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.கத்திரி வெயில் காலத்தில் மட்டுமல்லாது கடந்த 4மாதங்களாகவே தமிழகத்தில் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கத்திரி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. 
பல இடங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. பருவமழை காலத்தில் சரிவர மழை  பெய்யவில்லை.இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சென்னை நகரில் தண்ணீருக்காக குடங்களுடன் மக்கள் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நாளை (ஜூன் 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
இந்நிலையில் கடும் வெயில், தண்ணீர் பஞ்சம் உள்ள நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டத்தின்படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறப்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் பள்ளிகளை ஜூன் 10ம் தேதி திறக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் கடும் வெயில் காரணமாக நாளை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது 
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment