5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை துவக்கியது கல்வித்துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 22, 2019

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை துவக்கியது கல்வித்துறை

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை துவக்கியது கல்வித்துறை
நடப்பு கல்வியாண்டில் 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் விபரங்களை கல்வித்துறை கணக்கெடுக்க தொடங்கியுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை திருத்த சட்டம் 2019ன்படி பள்ளி கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில பாட திட்டத்தை பின்பற்றி செயல்பட்டு வருகின்ற ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி பள்ளிகளான மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2019-20ம் கல்வியாண்டில் இருந்து கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
பள்ளி கல்வி இயக்குநர் மற்றும் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய தலைவர் உள்ளிட்டோர் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20ம் கல்வியாண்டு முதல் ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்துதல் தொடர்பாக தொடக்ககல்வி இயக்குநரின் பரிந்துரைகள் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தில் விவாதிக்கப்பட்டு பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கப்பட்டு அதனை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தொடக்க கல்வி இயக்குநருக்கு வாரியத்தின் நிர்வாக குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றி 2019-20ம் கல்வியாண்டு முதல் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து, அந்த மாணவர்களின் அனைத்து விபரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் விபரங்களை சேகரித்து கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment