பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 29, 2015

பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம்

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிப்பது குறித்து, திட்டமிட்டு வருவதாக, அரசுத்தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசுத்தேர்வுத்துறை கடந்த ஆண்டில் முறைகேடுகளை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.நடப்பு கல்வியாண்டிலும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த, இறுதிகட்ட ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு, புத்தகம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ஓராண்டு தடையும்; துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல், சக மாணவர்களின் உதவியை நாடுதல் போன்றவற்றுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும் விதிப்பது, அமலில் இருந்து வருகிறது. மேலும், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், தரக்குறைவாக நடந்துகொள்ளும் மாணவர்களுக்கும், சக மாணவர்களின் விடைத்தாள்களை வாங்கி எழுதும் மாணவர்களுக்கும் ஆயுள் தடை விதிப்பது மட்டுமின்றி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், முடிவுசெய்யப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஓராண்டு, இரண்டு ஆண்டு தடைவிதிப்பது நடைமுறையில் உள்ளது. வாழ்நாள் தடை சார்ந்த தகவல்கள் இதுவரை இல்லை. தற்போது, இதுசார்ந்த சுற்றறிக்கையும் வரவில்லை,'' என்றார். அரசுத்தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, ''தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தகவல்கள் தெரிவிக்கப்படும். தற்போது, இதுசார்ந்த தகவல்கள் தெரிவிக்க இயலாது. தேர்வு சார்ந்த செயல்பாடுகள் நடந்து வருகின்றன,'' என்றார்.

No comments:

Post a Comment