பெண்கள் பள்ளியில் பாழடைந்து கிடக்கும் வகுப்பறைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 10, 2015

பெண்கள் பள்ளியில் பாழடைந்து கிடக்கும் வகுப்பறைகள்

கோவை: ஆர்.எஸ்.புரம் மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகள் முறையாக பயன்படுத்தாமல், பாழடைந்து கிடக்கின்றன. இதனால், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்கள், விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக சரிசெய்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், பெரும்பாலான அரசு பள்ளிகளில் இதுபோன்ற அபாயங்களை சரிசெய்யாமல் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.புரம், மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 1200 மாணவிகள் படித்து வருகின்றனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்டு, 83 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், ஆரம்ப காலம் முதல் தற்போது வரை, மாணவிகளின் எண்ணிக்கை அதிக அளவில் கொண்டது இப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, பயன்படுத்தப்பட்டு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்களை கொண்ட கட்டடம் தற்போது பயன்படுத்தாமல், சேதமடைந்த டேபிள், நாற்காலிகள் போன்றவற்றை அடைத்துவைத்து, பயன்படுத்த இயலாத நிலையில் வைத்துள்ளனர். மேலும், உயிரியியல் பாட ஆய்வு வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மனித உடலின் மாதிரி பொம்மை, எலும்பு கூடு போன்றவைகளும் சிதறிக்கிடக்கின்றன.

பள்ளி தலைமையாசிரியை மோகனாம்பாள் கூறுகையில், "பழமையான மரம் காய்ந்து, பள்ளி கட்டடத்தின் மீது விழுந்ததால், சில வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. மாணவிகளின் பாதுகாப்பு கருதி, அப்பகுதிக்கு செல்லாத வண்ணம் தவிர்க்க, பழைய பொருட்களை வைத்துள்ளோம்" என்றார்.

மாநகராட்சி மவுனம்

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இப்பள்ளியில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, கட்டடத்தின் மேல் விழுந்த மரம் சீர்செய்து கொடுக்காமல் விடப்பட்டுள்ளது. இதனால், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இக்கட்டத்தை பயன்படுத்தாமல் விடப்பட்டாலும், இப்பகுதியை கடந்துதான் மாணவிகள் பிற இடங்களுக்கு சென்றாக வேண்டும். மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.

No comments:

Post a Comment