மதுரை காமராஜ் பல்கலை பணி நியமன முறைகேடு; விபரங்களை கேட்கிறது ஐகோர்ட் கிளை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 10, 2015

மதுரை காமராஜ் பல்கலை பணி நியமன முறைகேடு; விபரங்களை கேட்கிறது ஐகோர்ட் கிளை

மதுரை காமராஜ் பல்கலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை கோரியும் தாக்கலான வழக்கில், அரசுத்தரப்பில் விபரங்கள் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்த இஸ்மாயில் தாக்கல் செய்த மனு:மதுரை காமராஜ் பல்கலையில் கற்பககுமாரவேல் துணைவேந்தராக இருந்தபோது ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்தது. நீதிபதி (ஓய்வு) ராமன் விசாரித்தார். அறிக்கையை 2014 மார்ச் 10 ல் சமர்ப்பித்தார். அதில் நான் எழுப்பிய எந்த புகாரையும் பரிசீலிக்கவில்லை. புகார் அளித்தவர்கள், சாட்சிகள், பல்கலை அதிகாரிகளை விசாரிக்கவில்லை.

மொத்தம் 129 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை, ஆதி திராவிடர்களுக்குரிய ஒதுக்கீட்டில் நியமித்துள்ளனர். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆதி திராவிடர்களாக இருந்தாலும் பொதுப் பிரிவில்தான் வர வேண்டும். பரிசீலனைக்குழுவால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்கியுள்ளனர். 13 பேரின் நியமனங்கள் முறையற்றது என விசாரணைக்குழுவே தெரிவித்துள்ளது.

40 பேரின் நியமனம் பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை என குழு தெரிவித்துள்ளது. போதிய ஆவணங்கள் இல்லாததால் முறைகேடு நடந்துள்ளதா? இல்லையா? என்று முடிவுக்கு வர முடியவில்லை என ராமன் குழு தெரிவித்துள்ளது. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் அந்தோணி அருள்ராஜ் ஆஜரானார்.

மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு: நியமிக்கப்பட்டுள்ள சில ஆசிரியர்களின் பெயர்கள் பணி நியமன பரிசீலனை பட்டியலில் இல்லை. முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சில ஆவணங்களை காணவில்லை. பணி நியமனத்தில் விதி மீறல் நடந்துள்ளது. மனுதாரர் புகாரில் சில உண்மைகள் உள்ளன. நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதற்கு ஆவணங்கள் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில் எவ்வித முகாந்திரமும் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி,“அரசுத் தரப்பில் இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் விபரங்களை பெற்று பிப்.,6 ல் தெரிவிக்க வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment