தமிழகத்தில் 8 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மையமாகின்றன: அதிகாரி சிறப்பு பேட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 9, 2015

தமிழகத்தில் 8 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மையமாகின்றன: அதிகாரி சிறப்பு பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் 1977-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி செயல்பாட்டிற்கு வந்தது. 46 மீட்டர் உயரம் கொண்ட இந்த கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், பாதுகாப்பு கருதி 1994-ம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 20 ஆண்டுகளாக பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.

கடந்த 2013-ம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பில் மெரினா கலங்கரை விளக்கம் சீரமைக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது. அத்துடன் தரைதளத்தின் பின்புறம், தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஆரம்பகாலம் முதல் தற்போது வரை கலங்கரை விளக்கத்தின் செயல்பாடுகள், அதன் மீது பயன்படுத்தப்படும் சுழல் விளக்குகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து தினசரி ஏராளமான பேர் வந்து பார்த்து செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மேலும் 8 கலங்கரை விளக்கங்களை சுற்றுலா மையமாக மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் துறை இயக்குனர் (பொறுப்பு) டி.வெங்கட்ராமன் கூறியதாவது:-

கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதிகளை சுற்றி சுற்றுலா தொடர்பான பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் 78 கலங்கரை விளக்கங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் மற்றும் கன்னியாகுமரி, முட்டம் ஆகிய இடங்களில் உள்ள 8 கலங்கரை விளக்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மையங்களாக மாற்றப்பட உள்ளன.

இந்த கலங்கரை விளக்கங்களை சுற்றி ‘பொது தனியார் பங்களிப்பு’ (பி.பி.பி.) திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கங்களை பார்வையிடும் கேலரிகள், ரிசார்ட்கள் மற்றும் ஓட்டல்கள், தீம் பார்க் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், அரங்குகள், ஒலி-ஒளி மற்றும் லேசர் காட்சிகள், ரெஸ்ட்டாரண்ட்கள்- உணவு கூடங்கள், டிரைவ்-இன்-ரெஸ்ட்டாரண்ட்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மையமாக மாற வாய்ப்பு உள்ளது.

இதற்காக வரும் 14-ந் தேதி (புதன்கிழமை) கொச்சியிலும், 17-ந் தேதி (சனிக்கிழமை) விசாகப்பட்டிணத்திலும், 19-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னையிலும் தனியார் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வகையிலான முகாம் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து இறுதியாக மும்பையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டமும் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து முன்வரும் முதலீட்டாளர்கள் கலங்கரை விளக்கங்களை சுற்றி சுற்றுலா மையமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment