பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாத நாட்களில் குழந்தைகளுக்கு அலவன்ஸ்: மத்திய அரசு புதிய விதிமுறை அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 2, 2015

பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாத நாட்களில் குழந்தைகளுக்கு அலவன்ஸ்: மத்திய அரசு புதிய விதிமுறை அமல்

பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாத நாட்களில், குழந்தைகளுக்கு அதற்கான அலவன்ஸ் வழங்க உத்தரவிட்டு, மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களின்கீழ் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், இந்த திட்ட அமலாக்கம் பற்றி புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்து, அதை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* உணவு தானியங்கள் இல்லை என்றோ, எரிபொருள் இல்லை என்றோ, சமையல் பணியாளர்கள் இல்லை என்றோ அல்லது பிற என்ன காரணத்தினாலாவது பள்ளியில் எந்தவொரு வேலை நாளிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்காவிட்டால், அடுத்த மாதத்தின் 15-ந்தேதிக்குள் அவர்களுக்கு மாநில அரசு, உணவு பாதுகாப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும்.

* மதிய உணவு தரத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரசு உணவு ஆராய்ச்சி கூடங்களில், அங்கீகாரம் பெற்ற சோதனைக்கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

* மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை, மதிய உணவு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். மாதம் ஒரு பள்ளி என தேர்ந்தெடுத்து உணவு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

* பள்ளிகளில் உணவு தானியம் இல்லை என்றாலோ, சமையல் செலவுக்கு பணம் இல்லை என்றாலோ பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் உள்ள பிற நிதிகளை பயன்படுத்திக்கொள்ள அதிகாரம் அளிக்கப்படுகிறது. பின்னர் மதிய உணவு நிதி வந்தவுடன் அதில் இருந்து செலவு செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment