10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெற அரசு புதிய ஏற்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 14, 2015

10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெற அரசு புதிய ஏற்பாடு

மழை வெள்ளம் காரணமாக நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.முதல் நாளான இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளியில் மருத்துவ முகாம் இன்று நடந்தது. இதனை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கோபி, வீரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மருத்துவ கல்வி இயக்குனர் கீதா லட்சுமி, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், இளங்கோவன், பிச்சை உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பின்னர் கல்வித்துறை செயலாளர் சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:–வெள்ள பாதிப்பால் 33 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. சேதம் அடைந்த பள்ளிகளை திறக்க கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து தீவிர முயற்சிகள் மேற்கொண்டதால் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.பள்ளியில் தேங்கி இருந்த மழைநீர் மற்றும் கழவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7,500 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு சுகாதாரம் கிடைக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளது.20 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் 40 பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படும். மாணவ–மாணவிகளுக்கு தேவையான மருத்துவ உதவி, ஆலோசனைகள் முகாமில் அளிக்கப்படும்.தமிழ்நாட்டில் 1½ கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் சுகாதார விழிப்புணர்வு மூலம் 4½ கோடி மக்களுக்கு அதன் பலன் சென்றடைகிறது. பள்ளி தொடங்கிய நாளான இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நோட்டு மற்றும் பாட புத்தகம், ஒரு செட் சீருடை வழங்கப்படுகிறது.மேலும் வெள்ளத்தில் சேதம் அடைந்த கல்வி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நாளை முதல் 2 வாரம் நடக்கிறது. சென்னையில் 54 மையங்களில் முகாம் நடக்கிறது. என்னென்ன கல்வி சான்றிதழ் தேவையோ அதற்கு விண்ணப்பம் அளித்தால் ஒரு வாரத்தில் மாற்று சான்றிதழ் கிடைக்க ஆவண செய்யப்படும்.பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 10, மற்றும் 12–ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை எண்ணி பயப்பட தேவையில்லை. அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும்.தேர்வில் எளிதில் வெற்றி பெற மாணவர்களுக்கு அரசு எல்லா வகையிலும் உதவி செய்யும். தேர்வு பயம் இல்லாமல் பொது தேர்வை சந்திக்கக்கூடிய ஆலோசனைகளை கவுன்சிலிங் குழு வழங்கும்.இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்.அனைத்து மாணவர்களும் பொது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச தேர்ச்சி பாட திட்ட கையேடு வழங்கப்படும்.இது மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இதை படித்தாலே அனைத்து மாணவர்களும் எளிதில் வெற்றி பெறலாம். இந்த கையேட்டில் அனைத்து பாடங்களுக்குரிய முக்கியமான கேள்வி– பதில்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த கையேடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment