வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 25, 2016

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 11 நகரங்களில் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டி சுட்டெரித்தது.

தமிழ்நாட்டில் இன்று வெயில் கொளுத்தியது. கடும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டைவிட்டு வெளியே செல்வதை மக்கள் தவிர்த்தனர். கோடை விடுமுறையாக இருக்கின்ற போதிலும் கோடை வாசஸ்தலம் தவிர மற்ற சுற்றுலா தலங்களில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. வெப்பத் தாக்குதல் அதிகம் என்பதால் மாலை நேரத்தில் சென்னைவாசிகள் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரையை நோக்கி படையெடுத்தனர்.



இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி பாரன்ஹீட், சென்னை நுங்கம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சென்னை நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம், கடலூர், தர்மபுரி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய 11 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது.

No comments:

Post a Comment