நேரடி கியாஸ் மானியம் பெற காலக்கெடு நவம்பர் 30–ந்தேதியுடன் முடிகிறது எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 19, 2016

நேரடி கியாஸ் மானியம் பெற காலக்கெடு நவம்பர் 30–ந்தேதியுடன் முடிகிறது எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு


நேரடி கியாஸ் மானியம் பெற காலக்கெடு நவம்பர் 30–ந் தேதியுடன் முடிகிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் 

இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பி.பி.சி.) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்.பி.சி.) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு, கடந்த ஜூலை மாதத்திற்குள் ஆதார் எண்கள் சமர்ப்பிக்க தவறிய, வாடிக்கையாளர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் நிறுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் மானியத்தை தனி வங்கி கணக்கு ஒன்றில் எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன.

வரும் நவம்பர் 30–ந் தேதிக்குள் நேரடி கியாஸ் மானியம் பெற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட சமையல் கியாஸ் மானியத்தை திரும்ப வழங்குவதுடன், வரும் காலத்திற்கான சிலிண்டர் மானியமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மானியம் 

சமையல் கியாஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களில் தமிழகத்தில் 1 கோடியே 67 லட்சத்து 63 ஆயிரமும், புதுச்சேரியில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 700 வாடிக்கையாளர்களும் உள்ளனர். இதில் தமிழகத்தில் 1 கோடியே 58 லட்சத்து 61 ஆயிரம் பேரும், புதுச்சேரியில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேரும் மானியம் பெறுகின்றனர்.

இவர்களுக்கு 2016–2017–ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 1–ந் தேதி வரை ரூ.3 ஆயிரத்து 877 கோடியும், புதுச்சேரியில் ரூ.80 கோடியே 73 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.

உஜ்வாலா திட்டம்

தமிழ்நாட்டில் ஆதார் எண்கள் சமர்ப்பித்து உள்ள சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பெறும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு ஆண்டில் வீடு ஒன்றுக்கு மானிய விலையில் 14.2 கிலோ எடைகொண்ட 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் நேரடியாக தனிநபர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மானியம் தேவையில்லை என்று கூறி உள்ள வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர, ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு வறுமைக் கோட்டுக்கு (பி.பி.எல்.,) கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கி வருகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் இணைப்புகளை வழங்க 6 லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில் தற்போது வரை 35 ஆயிரத்து 865 பேருக்கு இலவச இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசின் கொள்கை 

எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், மாநில அரசும் மானியம் திட்டங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் தேவை என்று மத்திய அரசின் கொள்கையை பின்பற்ற தொடங்கி உள்ளன.

குறிப்பாக உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை, வருவாய் துறை சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் அனைத்து ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கும் ஆதார் எண்ணை பெற்று வருகின்றனர். அதேபோல், ஆதார் எண்களை அனைத்து ரேஷன் அட்டைகளில் இணைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பெறுவது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாக இருந்தால் 1800 4252 47247 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை இந்தியன் ஆயில் கார்பரேஷன் தென்மண்டல முதன்மை தகவல் தொடர்பு மேலாளர் சபீதா நட்ராஜ் கூறினார்.

No comments:

Post a Comment