தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இந்த ஆதார் பதிவு முறையை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆதார் பதிவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாகச் சேர்த்து பயோ-மெட்ரிக் பதிவுகளை மட்டும் 98.10 சதவீதம் முடித்துள்ளோம். மேலும், இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து 89.83 சதவீதம் பேருக்கு ஆதார் எண்களை வழங்கியுள்ளோம்.
பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் எண்ணை அளிப்பதால் ஒரு சில வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் ஆதார் பதிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளும் என்று ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எத்தனை மையங்கள்?:
தமிழகத்தில் அரசு இணைய சேவை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் செயல்பாட்டுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை அரசு தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த மையங்களின் மூலம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு இணைய சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண்களை வைத்திருத்தவர்களுக்கு அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் அட்டைகளை அரசு இணைய சேவை மையம் மூலம் வழங்கி வந்தோம். இனி, ஆதார் பதிவுகளையே மேற்கொள்ள உள்ளோம். இதற்கென தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 1,280 கருவிகளை வழங்கியுள்ளது.
இந்தக் கருவிகள் மூலம் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியும். அரசு இணைய சேவை மையங்கள் அதிகளவு உள்ளதால் ஆதார் பதிவுகளை விரைவாகவும், மக்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் உடனடியாக மேற்கொள்ளவும் வழி ஏற்படும்.
எந்தக் கட்டணமும் இல்லை:
ஆதார் பதிவை மேற்கொள்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. அரசு இணைய சேவை மையங்களில் பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், ஆதார் பதிவுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால், ஆதார் பதிவு அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
பிளாஸ்டிக் அட்டை:
ஆதார் எண் உருவாக்கப்பட்டவுடன், அதற்கான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைக்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் ஆதார் பிளாஸ்டிக் அட்டையை அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர் அவர்கள்.
No comments:
Post a Comment