தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம்(சர்வ சிக்ஷா அபியான்) திட்டத்தை மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின்கீழ் ‘வாங்க பழகலாம்’ என்ற புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்த திட்டம் வரும் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின்கீழ்
நகராட்சிகள், கிராமப்புறங்களில் இயங்கும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு இரு பள்ளிகளுக்கும் இடையே மாணவர்கள் பரிமாற்றம் செய்யப்பட உள்ளனர். குறிப்பிட்ட பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்கள் அடுத்த 4 மாதங்களுக்கு ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ மாற்று பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். கிராமங்களில் உள்ள மாணவர்கள் நகரத்து பள்ளிக்கும், நகரத்து பள்ளியில் படிக்கும் மாணவர் கிராமத்துக்கும் அனுப்பப்பட உள்ளனர். புதிய இடத்தில் கல்வி கற்றல், விளையாட்டில் பங்கேற்பதன்மூலம் அந்த மாணவர்களின் கற்றல் திறன், சமூகத்தை அணுகும் முறை மேம்படும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் குளறுபடிகள் உள்ளன. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
நகர்புறத்து பள்ளிக்கும் கிராமப்புறத்து பள்ளிக்கும் இடையே துாரம் அதிகமாக உள்ளது. 20 மாணவர்களை குறிப்பிட்ட பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இருபது மாணவர்களை அழைத்து சென்றுவர இந்த நிதி போதாது. மாணவர்களின் நலன்கருதி பள்ளி ஆசிரியர்களிடம் பணம் சேகரித்து மாணவர்களை அழைத்து செல்லலாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம், இதற்காக அனுமதி கடிதம் பெற அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக குறிப்பிட்ட பெற்றோரை அழைத்து பேசியபோது முதலில் வேண்டாம் என்று மறுத்தாலும், ஆசிரியர்களான எங்களை நம்பி மாணவர்களை அனுப்ப சம்மதித்தனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு இடையேயான தொலைவு 40 முதல் 70 கிலோமீட்டர் வரை இருக்கிறது.
அந்த மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதற்கு ஆசிரியர்களாகிய நாங்களே பொறுப்பு. இவ்வளவு தூரம் பயணம் செய்யும் மாணவர்கள் களைப்பில் ஓய்வெடுக்க முடியுமே தவிர கல்வி கற்க முடியாது. ஒரு நகராட்சி பள்ளி இருக்ககூடிய ஒன்றியத்தில் உள்ள எல்லா பள்ளிகளையும் நகராட்சி பள்ளிகளாக கணக்கில் எடுத்துள்ளார்கள். இந்த தவறான நடைமுைறயால் பள்ளிகளுக்கு இடையேயான தூரம் அதிகமாக உள்ளது. அதனால் ஒரு தாலுகாவுக்குள் இரு பள்ளிகளை தேர்வு செய்து இந்த திட்டத்தின்கீழ் மாணவர்களை பரிமாறி கொண்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment