தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தின் இன்றைய நிலை... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 7, 2018

தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தின் இன்றைய நிலை...

தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தின் இன்றைய நிலை...

தமிழக அரசு பள்ளிகளில் 1992-ஆம் ஆண்டு முதல்முறையாக மேல்நிலை வகுப்புகளுக்கு “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. இங்கு கணினி அறிவியலில் பட்டம் பெறாவிட்டாலும், கணினி பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்தவர்கள் 1880 பேர் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். காலப்போக்கில் கணினி அறிவியலுக்கும் பி.எட்., அவசியம் என்ற நிலை உருவானதால் 2008-ல் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் 2014-ல் முடிந்து இறுதியாக பி.எட்., முடித்தவர்கள் மட்டும் கணினி ஆசிரியர்களாக பணியில் தொடரலாம் என உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக 652 பி.எட்., கணினி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்கள் இன்றுவரையில் நிரப்பப்படாமலேயே உள்ளது.

ஒரு கட்டத்தில் கணினி அறிவியலுக்கும் பி.எட்., படிப்பு கட்டாயம் என்ற நிலை உருவானது. இதனால், அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்ற கனவுகளுடன் பல்லாயிரக்கணக்கான கணினி அறிவியல் பட்டதாரிகள் பி.எட்., முடித்தனர். ஆனால், இன்றுவரையில் தமிழக பள்ளி கல்வித்துறையால் “கணினி அறிவியல்” பாடம் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே இருந்துவருகிறது.

  கணினி அறிவியலுக்கு பி.எட்., துவங்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை “கணினி அறிவியல்” பாடத்திற்கென ஆசிரியரை நியமனம் செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணினி அறிவியல் பட்டதாரிகளின் சார்பில் கணினி அறிவியல் பாடத்திற்கு உரிய பணி விதியை உருவாக்கித் தர வேண்டி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யவும், அவர்களுக்கு உரிய பணி விதியை உருவாக்கிதரவும அரசு இன்றுவரை முன் வரவில்லை. கணினி அறிவியல் பாடத்திற்கு உரிய ஆசிரியரை நியமனம் செய்வதற்கு பணி விதியை உருவாக்கி விட்டால், பிறகு தொகுப்பூதியத்தில் இல்லாமல் நிரந்தர கணினி ஆசிரியரையே தொடர்ந்து நியமனம் செய்ய வேண்டுமே என அரசு மெத்தனம் காட்டுகிறதா?? இதனால், 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக் கல்வியும், 50,000-கும் மேற்பட்ட பி.எட்., கணினி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., படித்தவர்கள் அனைவரும் விரைவில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் ஆகிவிடுவோம் என்ற கனவுகளோடு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த அவலம் தமிழ்நாட்டில் தான் அதிகம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

அரசு பள்ளி :-

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கட்டாய கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சிக்காக மிகப்பெரிய ஒரு தொகை செலவிடப்படுகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறிப்பிடத்தக்க அளவு பணம் விரயம் செய்யப்படுகிறது.

சுருக்கமாக சொல்லப்போனால், இவ்வாறு செலவு செய்வதைக் காட்டிலும் அதற்குப் பதிலாக பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையே முழுநேர ஆசிரியராக பணி நியமனம் செய்துவிடலாம். இது அரசின் கொள்கை முடிவில் கொண்டுவரப்படுமா??

அரசு பள்ளி மாணவர்கள் :-

சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பெறுவதில் சிரமம். ஆன்லைன் மூலம் பெறும் சான்றிதழில் தவறு இருந்தால் தவறை  சரி செய்வதற்கு மேலும் பணம் விரயம்.

மாணவர்களின் பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது சிறு எழுத்துப்பிழை ஏற்பட்டாலோ சரி செய்வதில் சிக்கல்… என அனைத்து நிலைகளிலும் கணினி மற்றும் கணினி ஆசிரியர்களின் தேவை இன்று அதிகரித்துவிட்டது.  மடிக்கணினியை முழுமையாக பயன்படுத்தத் தெரியாத பட்சத்தில் அதை மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து என்ன பயன் ??

அரசு பள்ளிகளில் தமிழுக்கு - தமிழாசிரியர், ஆங்கிலத்திற்கு - ஆங்கில ஆசிரியர், கணிதத்திற்கு - கணித ஆசிரியர் என இருக்கும் பட்சத்தில் கணினி அறிவியலுக்கு மட்டும் வேறு ஒரு துறையைச் சேர்ந்த ஆசிரியர் கணினி அறிவியல் பாடம் நடத்துவது எப்படி சரியானதாக அமையும்?? 90,00,000 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் நலன் கருதி தமிழக அரசு இதனை கனிவுடன் பரிசீலணை செய்ய வேண்டும்.

  செய்தி :-

*ச.கார்த்திக்*
(9789180422)
(மாநில பொருளாளர்)

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

1 comment:

  1. இவர்கள் மக்கள் வரிப் பணத்தை விரையம் செய்யாமல் ஒழுங்காக அந்த அந்த பாடத்திற்குரிய ஆசிரியர்களை நியமித்தாலே தமிழகத்தில் கல்வித்துறை என்றோ முன்னேறி விடும்.
    பக்கத்து மாநிலம், அடுத்த மாநிலம் என அனைத்து மாநிலமும் கல்வியில் முன்னேறினால் எங்களுக்கென்ன ??????
    நாங்கள் மக்கள் வரிப் பணத்தை நலத் திட்டத்திற்கும், நூற்றாண்டு விழாவிற்கும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி எனச் சொல்லி விரையம் செய்வோம்.
    ஆனால்
    அதற்கான ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம் ஏனென்றால் தமிழகம் கல்வியில் முன்னேறி விடுமே????????

    ReplyDelete