வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் விண்ணப்பங்களை 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து, பணத்தைத் திருப்பி அளிக்கும் வகையிலான வழிமுறைகள், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வருவாய் செயலர் அஜய் பூஷண் பாண்டே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வருமான வரி செலுத்தும் பெரும்பாலானோர் தற்போது இணையவழியிலேயே தங்களது வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றனர். அவற்றின் மீதான பரிசீலனைகளும் இணையவழியில் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டில், பரிசீலனை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் முடிக்கும் நோக்கில், நேரடி வரிவிதிப்பு ஆணையத்தின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 4,200 கோடியை மத்திய அரசு கடந்த மாதம் ஒதுக்கீடு செய்தது. அடுத்த 2 ஆண்டுகளில், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடையும்.
அதன்பிறகு, வருமான வரி செலுத்தும் நடவடிக்கைகளில் முழு வெளிப்படைத்தன்மை ஏற்படும். மேலும், பணியாளர் தலையீடும் குறையும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment