எங்களுக்கு அப்பா மாதிரி; சுரேஷ் சாரை மாத்தாதீங்க!’ - பாசப்போராட்டம் நடத்திய மாணவர்கள்
திருப்பூர் அருகே ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட காரணத்தால் பணியிடமாறுதல் வழங்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிரியர் சுரேஷை சூழ்ந்துக்கொண்டு கண்ணீர்விடும் மாணவர்கள்பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தமிழகம் முழுக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத்திரும்பாவிட்டால் ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள் எனத் தமிழக அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.இந்தநிலையில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பிய திருப்பூர் வெள்ளியங்காடு அரசு நடுநிலைப்பள்ளிஆசிரியர் சுரேஷ் என்பவரை பணியிடமாற்றம் செய்த மாவட்டக் கல்வித்துறையினர், அவரை பெரிச்சிபாளையம் என்ற பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதனால் அதற்கான உத்தரவு நகலைப் பெறுவதற்காக ஆசிரியர் சுரேஷ் இன்றைய தினம் பள்ளிக்குச் சென்றிருந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட அப்பள்ளி மாணவர்கள், அவர் இந்தப் பள்ளியை விட்டுச்செல்லக் கூடாது என அழத் தொடங்கினார்கள்.
அவரது கைப்பேசி, பேனா மற்றும் இதர உடைமைகளைப் பிடுங்கிவிட்டு, அங்கிருந்து ஆசிரியர் சுரேஷை நகரவிடாமல் கண்ணீர் கடலில் மிதந்தனர் மாணவர்கள். அவர்களை சமாதானப்படுத்தி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்த ஆசிரியர் சுரேஷ்,பின்னர் பணியிட மாறுதலுக்கான உத்தரவு நகலைப் பெறாமலேயே சென்றார்.ஆசிரியர் சுரேஷ் குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், ``இன்னைக்குத்தான் தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக்கைத் தடை பண்ணியிருக்கு. ஆனால், எங்கள் ஆசிரியர் அதை 4 வருடங்களுக்கு முன்னரே இந்தப் பள்ளியில் செயல்படுத்திவிட்டார். நாமும் தூய்மையாக இருக்கணும். பள்ளிக்கூடமும் தூய்மையாக இருக்கணும்னு எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் அவர். எங்கள்ல யாராவது மதிய உணவு கொண்டு வரலைன்னா, அவரே சாப்பாடு வாங்கிக் கொடுத்து சாப்பிட வைப்பார்.
சுரேஷ் சார் எங்களுக்கு ஒரு அப்பா மாதிரி என ஒட்டுமொத்தமாகக் கண்களில் நீர் வடித்தார்கள் மாணவர்கள்.1 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் கணித ஆசிரியராகக் கடந்த 10 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார் சுரேஷ். அத்துடன் பள்ளியின் சுற்றுச்சூழல் குழு ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். ஆசிரியர் சுரேஷின் பணியிட மாறுதல் குறித்த தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் பள்ளி வளாகத்தில் திரண்டுவிட்டனர்.
மேலும் ஆசிரியர் சுரேஷின் பணியிடமாறுதல் உத்தரவை ரத்து செய்துவிட்டு, இதே பள்ளியில் மீண்டும் அவர் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உடனடியாக மனு ஒன்றையும் அளித்திருக்கிறார்கள் அம்மக்கள்.ஆசிரியரை சூழ்ந்துகொண்டு மாணவர்கள் நடத்திய பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
No comments:
Post a Comment