திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக இருப்பவர் செல்வசிதம்பரம். இப்பள்ளியில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர், கற்பித்தலில் புதுமை புகுத்துதல், பள்ளி முன்னேற்றம் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தி தனது சொந்த முயற்சியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள் இன்ஸ்பேர் விருது மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் 'குருசேத்ரா' உட்பட பல்வேறு விருதுகள், பல்வேறு தனியார் அமைப்புகளின் விருதுகள் வாங்க காரணமாக இருந்துள்ளார்.
இதனால் இவர் முத்துப்பேட்டை பகுதி மக்களின் பாராட்டினை பெற்றுள்ளார். இவரின் பணிகளை பாராட்டி பல்வேறு தனியார் அமைப்புகள் நிறைய விருதுகளை வழங்கியுள்ளது.
அதேபோல் செல்வசிதம்பரம், ரோட்டரி கிளப், தனது நண்பர்கள் உதவியுடன் ₹2 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தி உள்ளார். . அதேபோல் கஜா புயலில் தனது தலைமையில் இளைஞர்களோடு பல்வேறு மீட்பு பணிகளை மேற்கொண்ட அவர், தனது நண்பர்கள் மூலம் ரூ.10 கோடிக்கும்மேல் பொருட்களை சேகரித்து முத்துப்பேட்டை பாதிப்புக்குள்ளான சுற்றுபகுதி மக்களுக்கு வழங்கினார். சமீபத்தில் இதனை பாராட்டி திருவாரூர் கலெக்டர் ஆனந்த் விருது வழங்கினார். அதேபோல் தம் பள்ளியில் பயிலும் மாணவர்களில் கஜா புயலால் முழுமையாக வீடிழந்த 5 மாணவர்களுக்கு நண்பர்களின் உதவியோடு புதிய வீடுகளை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2018-19 கல்வியாண்டில் தமிழக அரசு இவரின் பணிகளை பாராட்டி 'கனவு ஆசிரியர் விருதும் ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கியது.
இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இந்த தொகையுடன் இன்னும் தனது சொந்த பணத்தை கொஞ்சம் சேர்த்து, தனது பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை மேலும் மேம்படுத்த அதை வழங்கி, சமீபத்தில் கழிவறை சீரமைப்பு பணிகள் நடத்தி டைல்ஸ் பதித்து அதனை புதுப்பித்து தந்துள்ளார். இச்செயல் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதனையறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் செல்வசிதம்பரத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தான் பணியாற்றும் பள்ளியின் கழிப்பறையை மேம்ப்படுத்திய ஆசிரியர் செல்வ சிதம்பரத்திற்கு பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிக்கிறது
No comments:
Post a Comment