மாணவர்களே நடத்திய மாநிலப்போட்டிகளும் மாபெரும் விழாவும்..*
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளி- கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் *'மாணவர் செயற்களம்'* என்ற மாணவர் இயக்கமானது காரைக்குடி, கண்ணதாசன் மணிமண்டபத்தில் வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது. ஏற்கனவே தமிழகத்தின் ஏழு மண்டலங்களில் நடத்தப்பெற்ற மண்டலப்பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாநில அளவிலான இறுதிப்போட்டிகள் காலை முதல் மாலை வரை பள்ளி, கல்லூரி பிரிவுகளுக்கு தனித்தனியே நடைபெற்றன.
*'இவர்தாம் வீறுகவியரசர்..' என்னும் தலைப்பிலான மாணவர் கருத்தரங்கினை* மருத்துவர் அமலன் தொடங்கிவைத்தார். மாணவர் செயற்கள அறிவுரைஞர் முனைவர் தமிழ்முடியரசன் தலைமை வகித்துப்பேசினார். *'பொதுவுடைமையும் முடியரசனாரும்'* என்னும் தலைப்பில் திருவாரூர் இளந்தமிழ் திருப்பதி, *'சாதிஒழிப்பும் முடியரசனாரும்'* என்னும் தலைப்பில் கோபிசெட்டிபாளையம் கோகுல், *'திராவிடமும் முடியரசனாரும்'* என்னும் தலைப்பில் இராசபாளையம் விசயநம்பி, *'தமிழியமும் முடியரசனாரும்'* என்னும் தலைப்பில் கல்லல் முத்துக்குமரன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்தினர்.
மாலை நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவில் புதுகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். எழுத்தாளர் பாரி முடியரசன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை, தே பிரித்தோ மேனிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (தமிழ்முடியரசன்) தொடக்கவுரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா வாழ்த்துரையாற்றினார். *'பெரியார் வழியில் முடியரசனார்'* என்னும் தலைப்பில் பெரியாரியச் சிந்தனையாளர் ஓவியா, *'மகாகவியும் வீறுகவியும்'* என்னும் தலைப்பில் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பெயரன், பாடலாசிரியர் நிரஞ்சன்பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாணவர் செயற்களம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான விருதுகளில் *தந்தை பெரியார் விருது* மொழிப்போர் போராளி அண்டிரன் அவர்களுக்கும், *பெருந்தலைவர் காமராசர் விருது* கல்வியாளர் அருண் பிரசாத் அவர்களுக்கும், *தோழர் ப.ஜீவானந்தம் விருது* பசியில்லா தமிழகம் அறக்கட்டளை நிறுவனர் முகமதுஅலிஜின்னா அவர்களுக்கும் *வீறுகவியரசர் முடியரசனார் விருது* தியாகதுருகம் பாவலர் பொன்.சுப்பிரமணியம் அவர்களுக்கும் வழங்கப்பெற்றன.
தமிழக அளவில் கலை- இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தனித்திறன்களில் தொடர்ந்து சாதனைகள் புரிந்துவரும் நூறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு *'மாணவ நன்மணி'* விருதும் வழங்கப்பெற்றன. மாநில அளவிலான பேச்சுப்போட்டிகளில் பள்ளி-கல்லூரி பிரிவில் வெற்றி பெற்றோர்க்கு முதல் மூன்று பரிசுகளாக பரிசுத்தொகை உரூ.10,000, உரூ.7,000, உரூ.5,000 உடன் *'இளம் சொல்லரசு'* என்னும் விருதும் வழங்கப்பெற்றது.
முன்னதாக மண்டல ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பிரகாசு நன்றிகூறினார். தலைமை ஒருங்கிணைப்பாளரும் சமூகமே எந்திரி இதழ் பொறுப்பாசிரியருமாகிய மு.இராகவேந்திரன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மாணவர் செயற்கள நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்வுகளை மாணவர்களே முழுமையாக ஏற்பாடு செய்து தொய்வின்றி,சிறப்புற நடத்தியது மிகுந்த பாராட்டைப்பெற்றது.
No comments:
Post a Comment