மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 4, 2019

மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம்

பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீசஸ் தேர்வுகளையும், குரூப் ஏ மற்றும் குரூப் பி பணியிடங்களுக்கான தேர்வுகளையும் நடத்துகிறது. எஸ்.எஸ்.சி எனப்படும் தேர்வாணையம், பெரும்பாலும் குரூப் பி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் தேர்வர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து தனித்தனியாக தேர்வு எழுத வேண்டி இருக்கிறது. இதனால், பணமும், நேரமும் வீணாவதுடன், அலைச்சலும் ஏற்படுகிறது. இதை கருத்திற்கொண்டு, பொது தகுதி தேர்வு (சி.இ.டி.) என்ற பெயரில் ஒரே தேர்வு மூலம் பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வை ஒரே அமைப்பு நடத்தும்.
இதுகுறித்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், தேர்வர்கள் உள்ளிட்டோரிடம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் கருத்து தெரிவிக்குமாறு கூறியுள்ளது. மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பணியிடங்கள், குறிப்பிட்ட குரூப் பி பணியிடங்கள், குரூப் சி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய பொது தகுதி தேர்வு நடத்தப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடத்த பிரத்யேகமான ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும். தற்போது, அரசு வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் தனித்தனி தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது.
இவற்றுக்கு ஒரே மாதிரியான தகுதிகள்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் 3 அடுக்குகள் கொண்டதாகவும், திறனறி தேர்வு உள்ளிட்டவையும் அடங்கியதாக இருக்கும். ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் பேர் எழுதி வருகிறார்கள். இவர்களுக்காகவே பொது தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் எண்ணற்ற தேர்வுகளை எழுத வேண்டிய சுமை நீங்குகிறது. விண்ணப்ப கட்டண செலவுகளும், தேர்வு மையத்துக்கு செல்வதற்கான பயண செலவுகளும் குறைகிறது.
மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைய வாய்ப்பு இருப்பதால், கிராமப்புற மாணவர்கள் எளிதில் சென்றுவர வழிவகை ஏற்படும். தங்களுக்கு விருப்பமான தேர்வு மையத்தை அவர்கள் தேர்வு செய்ய முடியும். மேலும், ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறைக்கான கால அளவு குறைவதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் வழி வகுக்கும். இந்த தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ளலாம். முதல்முறையாக, பட்டதாரிகள், 12-ம் வகுப்பு தேறியவர்கள், 10-ம் வகுப்பு தேறியவர்கள் ஆகியோருக்கான தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பொது தகுதி தேர்வு நடத்தப்படும். தற்போது, இந்த தேர்வுகளை எஸ்.எஸ்.சி.யும், ரெயில்வே தேர்வு வாரியமும் நடத்தி வருகின்றன. இந்த பொது தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரரிடம் தெரிவிப்பதுடன், தேர்வாணையத்திடமும் இருக்கும். இந்த மதிப்பெண்கள், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லும். இந்த மதிப்பெண்களை கூட்டிக்கொள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரரும் கூடுதலாக 2 தடவை பொது தகுதி தேர்வில் பங்கேற்கலாம்.
எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதுவே அவரது உரிய மதிப்பெண்ணாக கருதப்படும். இந்த தகுதி மதிப்பெண்ணுடன், சம்பந்தப்பட்ட தேர்வாணையங்கள் தனியாக நடத்தும் தேர்வுகள் அடிப்படையில், ஆட்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். இந்த தகுதி மதிப்பெண்களை பயன்படுத்தி, மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோல், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தேர்வு முறை, எந்த பின்னணியும் இல்லாதவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் எனவும் விண்ணப்பதாரருக்கும், தேர்வு அமைப்புக்கும் செலவை குறைக்கும் என்று கூறினார்.

No comments:

Post a Comment