தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிக் கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை திறக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவார்கள் என்பதால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1½ ஆண்டுகாலத்துக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வருகைதர உள்ளதால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், உள்பட முக்கிய பிரமுகர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வரவேற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி நாளை அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களில் மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்:-
சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று 1,650 மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, மலர்கொத்து கொடுத்து வரவேற்க செல்கிறார்.
அமைச்சர் பி.கே.சேகர் பாபு:- சென்ட்ரல் அருகே வால்டாக்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்க உள்ளார்.
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்:- ஆவடி டி.எஸ்.பி. அலுவலகம் பின்புறம் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்கிறார். அங்குள்ள காமராஜர் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும், அரசு உயர்நிலை பள்ளிக்கும் சென்று மலர் கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்க உள்ளார்.
அமைச்சர் தா.மோ. அன்பரசன்:- குன்றத்தூரில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் மூவரசம்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளிக்கும் சென்று மாணவ-மாணவிகளை வரவேற்கிறார்.
பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி:- பல்லாவரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்று இனிப்பு, பூங்கொத்து வழங்குகிறார்.
தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா:- தாம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்கிறார். அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் வெங்கடாபுரம் காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளை வரவேற்கிறார்.
விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகரராஜா கோயம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் விருகம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்கிறார்.
தியாகராயநகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி கோடம்பாக்கம் ரெங்கராஜபுரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளை வரவேற்கிறார். மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்கிறார்.
இதேபோல் அந்தந்த தொகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவ- மாணவிகளை வரவேற்க உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதால் முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற பல்வேறு மனமகிழ்ச்சி தரும் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முக்கியமான பாட கருத்துக்களை உள்ளடக்கிய புத்தாக்க பயிற்சிகளையும் அடுத்தடுத்து முறையாக செயல்படுத்திய பிறகு பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து தனி நபர் இடவெளியை கடை பிடித்து வகுப்பறையில் அமரவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களுக்கும் சென்று வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment