தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
மற்ற மாநிலங்களிலும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு வருகிறது. 1 முதல் 8-ம் வகுப்புகளை திறக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கடந்த மாதமே அறிவித்தது.
ஆனாலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் மாணவர்கள் பாதிக்காத வகையில் நிதானமான முடிவுகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 1 கோடியே 20 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதால் தற்போது 30 லட்சம் பேர் பள்ளிக்கு சுழற்சி முறையில் வருகிறார்கள்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஒருசில இடங்களில் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
பள்ளி திறந்து ஒருமாதம் ஆகின்ற நிலையில் நோய் தொற்று கட்டுக்குள் இருந்து வருவதால் மற்ற வகுப்புகளையும் திறக்க அரசு முடிவு செய்தது.
நவம்பர் 1-ந்தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் 2-வது கட்டமாக வரவழைக்கப்பட இருக்கிறார்கள்.
அதனால் இன்னும் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் 58 ஆயிரம் உள்ளன. இது தவிர மெட்ரிக்குலேசன் பள்ளிகள் 4,451 செயல்பட்டு வருகின்றன.
34 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படித்து வரும் சுமார் 65 லட்சம் மாணவ-மாணவிகள் நவம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிக்கு வர இருக்கிறார்கள்.
சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பறைகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் இட நெருக்கடி ஏற்படக்கூடும்.
அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் இந்த பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது. ஒரு வகுப்பு மாணவர்களை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கற்பித்தல் பணி நடப்பது வழக்கம்.
கொரோனா பாதிப்பு உள்ள இந்த சூழ்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி தனித்தனி வகுப்புகளாக பிரிக்கும்போது கூடுதலாக வகுப்புகள் தேவைப்படுகிறது.
அதனால் மாணவர்களை சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கு வரவழைக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாததால் அடுத்த கட்டமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலும் இட நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இல்லை.
அதிக மாணவர்கள் கொண்ட ஒருசில பள்ளிகளில் இந்த பிரச்சினை ஏற்படக்கூடும். தனியார் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை ஏற்படும். அதனால் தற்போதுள்ள சுழற்சி முறையை பின்பற்றி வகுப்புகளை நடத்த வாய்ப்புள்ளது.
அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளை பொறுத்து மாணவர்களை பள்ளிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் அழைக்கலாம்.
இது தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் வழிமுறைகள் வகுக்கப்படும்.
இதுகுறித்த விரிவான தகவல்கள் அரசு சார்பில் வெளியிடப்படும்.
கொரோனா தொற்று மாணவர்களை பாதிக்காத வகையில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் அனைத்து பள்ளிகளையும் தயார்படுத்தும் பணி நடைபெறும்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment